முகப்பு Bengaluru தமிழ்த் தொண்டர் கி.சு.இளங்கோவனார் மறைவு: உடல் பெங்களூரு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

தமிழ்த் தொண்டர் கி.சு.இளங்கோவனார் மறைவு: உடல் பெங்களூரு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

128
0

பெங்களூரு, அக். 12: தமிழ்த் தொண்டரும், திருவள்ளுவர் சங்கத்தின் தலைவரும், பெரியாரின் சீடரும், வள்ளலார் மீது பற்று கொண்டவருமான கி.சு.இளங்கோவனார் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் காலமானார். அவரது உடலை பெங்களூரு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.

பெங்களூரு விஜயநகர் அமர்ஜோதி நகரில் வசித்து வந்தவர் கி.சு.இளங்கோவன் (75). தனியார் நிறுவ னத்தில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற‌ இவர், தமிழ் மீதும், திருவள்ளுவர், தந்தை பெரியார், வள்ளலார் மீதும் மிகவும் பற்று கொண்டவர்.

இதனால், பெங்களூரு திருள்ளுவர் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்துடன் இணைந்து ‘தித் திக்கும் திருக்குறள்’ என்ற பெயரில், திருக்குறள் வகுப்புகளை நடத்தி வந்தார்.

அண்மையில் அவருக்கு உடல் பாதிக்கப்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந் தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2 மணியளவில் காலமானார். இவருக்கு, மனைவி அன்னம்மாள், மகள் வெண்ணிலா, மகன் அருள் உள்பட பேரன், பேத்தி உள்ளனர்.

தமிழ் சார்ந்த பல்வேறு பல்நிகழ்ச்சிகளில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தார். இளங்கோவன் மறைவுக்கு, பல தமிழ் அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள‌து. அஞ்சலியின் போது திருக்குறள் ஒலிநாடா இசைக்கப்பட்டது.

உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2.30 மணிக்கு, பெங்களூரு மருத்துவ கல்லுாரிக்கு, அவரது உடல் தானம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக அவர் ஏற்கெனவெ எழுதி வைத்திருந்த இறப்பு ஆவணத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இறுதி அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது.

இளங்கோவனாரின் மறைவு தமிழுக்கும், தமிழர்களுக்கு பேரிழப்பாகும் என்று கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் தெரிவித்தார்.

தமிழர், கன்னட ஒற்றுமை மாநாட்டிற்கு பெரும் ஆதரவை தெரிவித்து வந்த இளங்கோவனார், மறைவு, தமிழர்களுக்கு மட்டுமின்றி, கன்னடர்களுக்கு பேரிழப்பாகும். பெரியார் மீது மட்டுமின்றி, திராவிடக் கொள்கையில் பற்றுடையவராக இருந்த அவரின் மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி, எனக்கும் பேரிழப்பாகும் என்று தமிழர், கன்னட ஒற்றுமை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர், தமிழார்வலர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.

காலமெல்லாம் தமிழ் மொழிக்கும் தமிழர் நல்வாழ்வுக்கும் உழைத்த பெரும்புலவர் கி.சு.இளங்கோவனார் அக். 11‍ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற துயரமான செய்தியை அறிந்து அதிர்ச்சடைந்தேன். ஐயா அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

புலவர் கி.சு.இளங்கோவன் ஐயா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொள்கை உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திருவள்ளுவர் சங்கத்தின் துணைத் தலைவர் அரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரும்புலவர் கி.சு.இளங்கோவன் மறைவுக்கு இரங்கல்

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: காலமெல்லாம் தமிழ் மொழிக்கும் தமிழர் நல்வாழ்வுக்கும் உழைத்த பெரும்புலவர், உலகத் தமிழ் கழகத்தின் மாநில அமைப்பாளர், திராவிடர் கழகத்தின் தென்மண்டல செயலாளர், திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர், குறள் ஒலி இதழின் ஆசிரியர், தித்திக்கும் திருக்குறள் நிகழ்வின் அறிஞர், தமிழ் புத்தகத் திருவிழா சிறப்பு மலரின் ஆசிரியர் திரு.கி.சு.இளங்கோவனார் அவர்கள் 11-10-2024 அன்று நண்பகல் 2.10 மணிக்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற துயரமான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். திருக்குறள் கோட்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் கொண்டிருந்த திரு.கி.சு. இளங்கோவன், தமிழ் இலக்கணம், இலக்கியத்தில் கரை கண்டவர்.

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் முன்னெடுத்த அனைத்து நிகழ்வுகளிலும் தீராத ஈடுபாடு கொண்டு பங்காற்றியவர். பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை உலகத் தமிழ் நாளாக கொண்டாடும் முடிவை வரவேற்று மகிழ்ந்தார். பாவேந்தர் இலக்கியத் தொடர், நூலோடு உறவாடு, தித்திக்கும் திருக்குறள் போன்ற முன்னெடுப்புகளில் முக்கிய பங்கு வகித்தார். திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமை சிந்தனைகளில் தீராத காதல் கொண்டிருந்த இளங்கோவன் அவர்கள் திருக்குறள் நெறிமுறைகளை வாழ்வியலாக கொண்டவர். ஐயா அவர்களின் மறைவு கர்நாடக தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தமிழ் உள்ளவரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

புலவர் கி.சு.இளங்கோவன் ஐயா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கர்நாடக தமிழர்களுக்கும் கொள்கை உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கிசு இளங்கோவன் அவர்களுக்கு கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்