பெங்களூரு, செப். 3: சுப்ரமண்யநகரில் வீடிழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பெங்களூரு ராஜாஜிநகர், சுப்ரமண்யநகர், இ பிளாக், 2வது ஸ்டேஜ், 4வது மெயின் சாலையில் எண் 1233/1 ல் வசித்து வந்த துப்புரவு தொழிலாளிகளின் 9 வீடுகள் இடித்து தள்ளப்பட்டது. அந்த இடம் பெரு பெங்களூரு ஆணையத்திற்குகு (கிரேட்டர் பெங்களூரு அதாரட்டி) சொந்தமான அந்த இடம் என்பதால், மழையால் பழைய வீடுகள் இடிந்து உயிர் பலியாகி விடுமோ என்ற அச்சத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த வீடுகளை இடித்து தள்ளியதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கெனவே 2022 ஆம் ஆண்டு வீடுகளிலிருந்து வெளியேறுமாறு மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் அந்த வீடுகளை இடிக்கும் போது, சம்பந்தப்பட்ட மக்களுக்கு நோட்டீஸ் வழங்கவில்லை.
இந்த நிலையில் தற்போதும் நகராட்சியில் பணியாற்றும் 9 வீடுகளை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களின் ஊதியத்தில், இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு வாடகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே நோட்டீஸ் வழங்காமல் வாடகை வசூலிக்கும் வீடுகளை இடித்து தள்ளியது எந்த விதத்தில் நீயாயம் என சம்பந்தப்பட்டவர்கள் கேள்வி எழுப்புக்கின்றனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கை ஏற்று, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த கிரேட்டர் பெரு பெங்களூரு ஆணையத்தின் ஆணையர் ராஜேந்திரசோழன், சட்டவிதிகளுக்கு உட்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், துப்புரவு தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அகில கர்நாடக பி.டி.சாலப்பா ஆதரவாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சூர்ய சந்திர மஞ்சண்ணா தெரிவித்தார்.
இதே கருத்தை பெரு பெங்களூரு ஆணையத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களின் மகாசபையின் பெங்களூரு தலைவர் எம்.நாகராஜ், அகில கர்நாடக டி.பி.எஸ் துப்புரவு தொழிலாளர்களின் மகாசபையின் துணைத் தலைவர் ஆர்.எம்.முதியாலு, திராவிட சுவாபிமானிகளா சேனையின் தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
பேட்டியின் போது, பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நாகபூஷன், சோமண்ணா, விஜயகுமார், டி. முத்தியாலு மூர்த்தி, சிவண்ணா உள்பட பாதிக்கப்பட்ட மக்களும் உடனிருந்தனர்.




























































