பெங்களூரு, பிப். 21: அயலக தமிழர் மாநாட்டில், வெளிமாநில தமிழர்கள் புறக்கணிப்படுவதால், இந்தியாவில் உள்ள 150 தமிழ் சங்கங்கள் மன வருத்தத்தில் உள்ளன என்று கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
வியட்னாம் நாட்டில் டானங் நகரில் நடக்கும் இரண்டாம் தமிழர் மாநாட்டிற்கு வருகை தந்த இந்திய மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவனிடம் இது தொடர்பான கோரிக்கை மனு தனஞ்செயன் தலைமையில் வழக்கப்பட்டது.உடன் தார்வார் மாவட்ட தமிழ்ச் சங்க துணை செயலாளர் குமரேசன், தில்லி தமிழ்ச் சங்க தலைவர் முகுந்தன் இருந்தனர். மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக நடப்பதில் மிக்க மகிழ்ச்சி. சமுதாயத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் நல்லாட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார். இந்த நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள்.
முதல்வர் சொல்லும் “எல்லார்க்கும் எல்லாம்” என்ற கோட்பாடு மிக சிறந்த கோட்பாடு. பாராட்டுகிறேன். ஆனால் இந்த கோட்பாடு வருடந்தோறும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 தேதிகளில் நடத்தப்படும் “அயலக தமிழர் மாநாட்டில் கடைபிடிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அயலக தமிழர் என்றால் அயல் மாநில தமிழர்கள் மற்றும் அயல்நாட்டு தமிழர்கள் என்றுதானே ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அயல்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மேடை ஏற்றப்படுகிறார்கள். வெளி மாநில தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் பலன் இல்லை.
இதனால் வெளி மாநிலத்தில் செயல்படும் சுமார் 150 தமிழ் சங்கங்கள் மன வருத்தத்தில் உள்ளனர். நாங்கள் இன்னும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை வைத்து இருக்கிறோம். எங்களை முதல்வர் புறக்கணிக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.
2026 ஜனவரி 11 மற்றும் 12 தேதிகளில் நடத்தப்படும் அயலக தமிழர் மாநாட்டில் தினமும் ஒரு அமர்வு வீதம் 2 அமர்வுகள் வெளிமாநில தமிழர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். செய்வீர்கள் என நம்புகிறோம்.
மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியில் வருடந்தோறும் நடத்தும் “அயலக தமிழர் மாநாடு” மிக சிறப்பாக நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற கோட்பாடு அங்கே கடை பிடிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
வருடந்தோறும் ஜனவரி 11 மற்றும் 12 தேதிகளில் நாள் ஒன்றுக்கு 4 அமர்வுகள் என்ற வீதம் 8 அமர்வுகள் நடத்தப்படுகின்றன. எல்லா அமர்வுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு தமிழர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது . இந்தியாவிலுள்ள வெளிமாநில தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் புறக்கணிக்கப் படுகிறார்கள். இதனால் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புக்கள் மன வேதனையில் உள்ளன.
இது குறித்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. முதல்வர் மனது வைத்தால் எங்கள் குறை தீரும் என உறுதியாக நம்புகிறோம்.
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் உங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி “அயலக தமிழர் மாநாட்டில்” வெளி மாநில தமிழர்களுக்கு தினம் ஒரு அமர்வு வீதம் 2 அமர்வுகள் ஒதுக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம்.
கருநாடகாவில் உள்ள 50 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் மற்றும் டில்லி தமிழ்ச் சங்கம், ஒரிசா தமிழ்ச் சங்கம், கேரள மாநிலத்தில் உள்ள 10 தமிழ்ச் சங்கங்கள் ஆந்திரா, தெலுங்கானா உட்பட இந்தியாவிலுள்ள அனைத்து மாநில தமிழ்ச் சங்கங்கள் இந்த உதவியை என்றும் மறக்காமல் உங்களை பாராட்டுவோம்.
உங்களால் முடியும் உங்களால் மட்டுமே முடியும் என உறுதியாக நம்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.































































