பெங்களூரு, மார்ச் 1: அனைவருக்கும் அனைத்தும் சமம் என்ற நிலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் உருவாக வேண்டும். சமூகத்தில் ஏற்ற-தாழ்வு, சாதி நிந்தனை உள்ளிட்ட சமூக அவலங்களை தடுக்க வேண்டுமானால் தமிழ்நாட்டை போல், கர்நாடக மாநிலத்திலும் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கிகாரம் வழங்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்தார்.
கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிட இயக்கம் தொடங்கியதின் நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெங்களூரு வசந்தநகர், மில்லர்ஸ் சாலையில் உள்ள தேவராஜ் அரஸ் பவனில் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடந்த விழாவை பெங்களூரு சிவாஜிநகர் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் ரிஷ்வான் அர்ஷத் தொடங்கி வைத்தார்.
மாநாடு குறித்து மாநில திராவிடர் கழக தலைவர் சானிகிராமன், அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் குணவேந்தன், முல்லைக்கோ உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினார். ஓய்வுபெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ், முன்னாள் கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார், முற்போக்கு சிந்தனையாளர் கே.எஸ்.பகவான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாட்டின் முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் கொ.வீ.நன்னன், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், மாநில திமுக பொறுப்புகுழுத் தலைவர் பெரியசாமி, உறுப்பினகள் ந.இராமசாமி, ஏ.டி.ஆனந்தராஜ், போர்முரசு கதிரவன், சற்குணா இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு தலைமை வகித்து ஆசிரியர் கி.வீரமணி பேசும்போது, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கர்நாடக மாநிலத்தில் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும், தீண்டாமை என்ற கொடுமை சமூகத்தை விட்டு விலக வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும் என்ற உன்னத லட்சியங்களை இலக்காக கொண்டு சுயமரியாதை இயக்கம் கடந்த 1925ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் லட்சியங்களை பட்டி தொட்டி என்று கொண்டு சேர்க்கும் பணியை தந்தை பெரியார் மேற்கொண்டார். சாதி ஒழிப்பு, தீண்டாமை அகற்றில், பெண் அடிமைக்கு முடிவு, சொத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கிகாரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை என பல்வேறு முழக்கங்களை சுயமாரியாதை இயக்கமும் அதை தொடர்ந்து திராவிடர் இயக்கமும் முன்னெடுத்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு எல்லாம் சட்ட அங்கிகாரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் படிபடியாக சட்ட அங்கிகாரம் கொடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுயமரியாதை திருமணம் நடந்த சமயத்தில் நீதிமன்றம், அதை திருமணமாக அங்கிகரிக்காமல் நிராகரித்த காலம் இருந்தது.
தமிழ்நாட்டின் முதல்வராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்றபின் சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கிகாரம் கொடுத்தார். அதன்பின் தமிழ்நாட்டில் லட்சகணக்கான சுயமரியாதை சீர்த்திருத்த திருமணங்கள் நடந்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் உள்பட பல முற்போக்கு சட்டங்கள் இயற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு போல், கர்நாடக மாநிலத்திலும் சுயமரியாதை திருமணங்களை அங்கிகரிக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும். சமூகநீதி கொள்கையில் உறுதிமிக்கவராக இருக்கும் முதல்வர் சித்தராமையா, இந்த சட்டம் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் ஓன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, கற்கால வாழ்க்கை முறைக்கு இளைஞர்களை கொண்டு செல்லும் வகையில் மத உணர்வை, விஷ விதையாக விதைத்து வருகிறது. பாஜவின் அடிமை புத்தியை தெரிந்து கொள்ளாத தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞர்கள், சங்பரிவார் அமைப்பின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வரும் பாஜவில் இணைந்து வருகிறார்கள். இது எதிர்காலத்தில் அவர்கள் தலைமுறைக்கு அவர்களே வைத்து கொள்ளும் கொல்லியாக மாறும் என்பதை சிந்திக்க வேண்டும். மானிடத்தை நல்ல வழியில் நடத்தி செல்ல வேண்டுமானால் தந்தை பெரியாரின் கொள்கை வழியை பின்பற்ற வேண்டும் என்றார்.

பகல் 12 மணிமுதல் 2 மணி வரை ஆய்வரங்கம் நடக்கிறது. சுயமரியாதை இயக்கம் நிகழ்காலமும் எதிர்காலமும் என்ற தலைப்பில் நடந்த ஆய்வரங்கிற்கு நரேந்திரநாயக் தலைமை வகித்தார். இதில் கர்நாடக தலித் சங்கர்ஷ் சமதி தலைவர் மாவள்ளி சங்கர், மும்பை இலெமுரியா அறகட்டளை தலைவர் சு.குமணராசன், நாகேஷ் அரளகுப்பே ஆகியோர் பேசினர். பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடந்த ஆய்வரங்கின் இரண்டாவது அமர்வில் உலகமயமாக்கும் பெரியார் கொள்கைகள் என்ற தலைப்பில் நடந்தது. கர்நாடக முன்னாள் சட்டமேலவை உறுப்பினர் வி.ஆர்.சுதர்சன் தலைமையில் நடந்த ஆய்வரங்கில் டாக்டர் எல்.அனுமந்தய்யா, முன்னாள் அமைச்சர் பி.டி.லலிதாநாயக், முன்னாள் கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் டாக்டர் துவாரகிஷ், கன்னட ஆய்வாளர் ஜானகெரே வெங்கடராமையா ஆகியோர் பேசினர். அதை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் நிறைவு விழா நடந்தது.
கர்நாடக அரசின் கீழ் செயல்படும் கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் பேராசியர் எஸ்.ஜி.சித்தராமையா தலைமையில் நடந்தது. முன்னாள் கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் காந்தராஜ், பகுத்தறிவு சிந்தனையாளர் கே.எஸ்.பகவான், கர்நாடக மாநில திமுக பொறுப்பு குழுக் உறுப்பினர் ந.இராமசாமி, சமூக செயற்பாட்டாளர் டி.நரசிம்மமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். திராவிடர் கழக தலைவர் டாக்டர் கி.வீரமணி மாநாட்டு நிறைவு பேருரை ஆற்றினார். முஜ்ன்னதாக எஸ்.குணவேந்தன் வரவேற்க முடிவில் முத்துமணி நன்னன் நன்றி கூறினார். பெங்களூரு, மைசூரு, தங்கவயல் உள்பட மாநிலத்தில் பலவேறு இடங்களில் இருந்து சமூக பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவில், கர்நாடக மாநில திராவிட கழகத்தின் காப்பாளராக மு.சானகிராமனும், தலைவராக குணவேந்தனும் அறிவிக்கப்பட்டனர்.































































