பெங்களூரு, நவ. 10: கர்நாடக திமுக இலக்கிய அணி சார்பில் துர்கா ஸ்டாலினின் அவரும், நானும் என்ற நூல் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.9) நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலினின் இளைய சகோதரர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி பங்கேற்று, நூலை அறிமுகம் செய்து வைத்தார்.
பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள இந்திய வேளாண்மை கழகம் அரங்கத்தில் இந்த விழா 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கர்நாடகத் தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் வரவேற்புரை ஆற்றினார். கர்நாடக மாநில திமுக இலக்கிய அணி செயலாளர் போர் முரசு கதிரவன் தலைமை தாங்கினார்.

மாநில திராவிட கழகத்தைச் சேர்ந்த ஜானகிராமன், கர்நாடக மாநில திமுக அவைத்தலைவர் பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மகளிர் அணி அமைப்பாளர் சற்குணம், கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள், இலக்கிய, மகளிர், இளைஞரணி, தொமுச நிர்வாகிகள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஜெய ராஜமூர்த்தி நூல் அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்கினார். தலைமை இலக்கிய அணி பொருளாளர் நாகை சந்திரபாபு வரவேற்புரை நிகழ்த்தினார். விழா மேடையில் நூலை லிட்டில் பிளவர் பள்ளியின் தலைவர் மதுசூதனபாபு, செங்கம் சிகரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் இலக்கியா, பெரியசாமி, தட்சிணாமூர்த்தி, கரிகாலன், முருகானந்தம், வே.பழனிவேலன் ஆகியோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.

விழா இறுதியில் தங்க தங்கவயல் கரிகாலன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிற்பகல் உணவு வழங்கப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில திமுக இலக்கிய அணி செயலாளர் போர் முரசு கதிரவன் செய்திருந்தார்.































































