பெங்களூரு, செப். 17: கர்நாடக தமிழர்கள் லட்சக்கணக்கில் ஒன்றாய் சேர்ந்து பலத்தை காட்ட வேண்டும் என்று பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை நாம் சோழர்கள் அமைப்பின் மல்லேஸ்வரம் பகுதி நிர்வாகிகள் சார்பில் அதன் சர்வதேசத் தலைவர் ஜெயபிரகாஷ் குருஜி, மாநிலத் தலைவர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: கர்நாடகத்தில் தமிழர்கள் 80 லட்சம் முதல் 1 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது.

மாநிலத்தில் 2 சதம் உள்ள மலையாளிகள் அமைச்சர்களாக பதவி வகிக்க முடிகிறது. ஆனால் மாநிலம் முழுவதும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் ஒருவர் கூட எம்.எல்.ஏவாகவோ, எம்பியாகவோ பதவி வகிக்க முடியவில்லை. அதற்கு அவர்களுக்கு எந்த கட்சிகளும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. காரணம் தமிழர்கள் ஒன்றுமையாக இல்லாததே முக்கிய காரணமாகும்.

தமிழர்கள் எத்தனை அமைப்புகளும் வைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தமிழர்களுக்கோ, தமிழுக்கு ஒரு பிரச்னை என்றால் ஒன்று கூடுவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. நாம் சோழர்கள் அமைப்பின் மூலம் வட கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழர்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். கர்நாடக தமிழர்கள் லட்சக்கணக்கில் ஒன்றாய் சேர்ந்து பலத்தை காட்ட வேண்டும். அதன் மூலம் தமிழர்கள் யாராவது பயன் அடைந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.

நிகழ்ச்சியில் அமைப்பின் செயலாளர் விநாயகம், வா.ஸ்ரீதரன், கோபிநாத், சௌந்தர்ராஜன், செந்தில், பாலகிருஷ்ணன், தேவராஜ், ராஜேந்திரா, நிர்மலா விநாயகம், நிர்மலாசங்கர், உமாமகேஸ்வரி, லாவண்யா, கற்பகம் உள்பட பலரும் கலந்து கொண்டனர். அடுத்த 15 நாட்களில் ராஜாஜிநகரில் நாம் சோழர்கள் அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இடம், நேரம் பின்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
































































