முகப்பு Bengaluru காமராஜர் வழியை தற்போதைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும்: டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

காமராஜர் வழியை தற்போதைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும்: டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ்

118
0

பெங்களூரு, ஜூலை 15: கர்மவீரர் காமராஜர் வழியை தற்போதைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அமைப்புச்சாரா தொழிலாளர்களின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரை, திருவள்ளுவர் சிலை எதிரே செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை விஷ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் பைப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதில் காமராஜருடன் பழகியவர்களான பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் இராசு.மாறன்,, மா.நடராஜ், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் வா.ஸ்ரீதரன், காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்ணன், கோபிநாத், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ராஜசேகர், திருமலை, கோபி, நிர்மலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, காமராஜரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பிறந்த நாளையொட்டி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்த பின்னர் டாக்டர் டி.ரமேஷ் பேசியது: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், கல்வித் தந்தை மரியாதைக்குரிய காமராஜர் ஐயாவின் 123 வது பிறந்த நாளை விஷ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் எனது தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடினோம்.

ஆண்டுதோறும் காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அதே போல இன்றும் காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினோம். இதில் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. காமராஜரைப் பற்றி கூற வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது.

அவர் பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். பல குழந்தைகளை பள்ளிக்கு வந்து படிப்பதற்கு தேவையான பல்வேறு திட்டங்களை வகுத்தவர். அரசியலில் நேர்மையை கடைபிடித்தவர். அவரது வழியை தற்போதைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் நாடு சிறந்த முறையில் வளர்ச்சி அடையும். அவர் சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல. நல்ல மனிதர்.

சுயநலத்திற்காக அவர் எதையும் செய்து கொள்ளாதவர். விதிகளை மீறி சொந்த, பந்தங்களுக்கு எதையும் செய்து கொடுக்காதவர். அவர் வழியை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் திரளாக வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்