கோலார் தங்கவயல், ஜூலை 14: 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க, தளபதி மு.க.ஸ்டாலினை ஆதரிக்க, தமிழ்நாட்டில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி இங்குள்ள தோழர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள கிங்ஜார்ஜ் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) கலைஞர் மு.கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஏழைகளுக்கும், மகளிருக்கும் நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய ந.இராசாமி, கலைஞர் மு.கருணாநிதி தமிழ்நாட்டின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியதை மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. டெல்லியின் கட்டளைக்கு தமிழ்நாட்டின் தலைவர்கள் செயல்பட்ட நிலையை மாற்றி அமைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். அவர் பல குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்களை உருவாக்கியவர்.
நாட்டின் இறையாண்மைக்கும், வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர் டாக்டர் கலைஞர். அவரின் வழிதோன்றலான பெரியார், அண்ணாவின் சீடரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுபடுத்த வேண்டியது தமிழர்கள் அனைவரின் கடமையாகும்.

2026 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை 7வது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழர்கள், தமிழ்நாட்டில் உள்ள தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திமுகவின் சாதனைகளையும், ஒன்றிய பாஜக அரசின் மாற்றாம்தாய் மனப்பான்மையும் எடுத்துக் கூறவேண்டும். அதன்மூலம் அவர்களின் வாக்குகளை திமுகவிற்கு அளிக்க வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும், உதவிகளையும், எனது தலைமையிலான மாநில திமுகவினர் செய்ய உறுதி பூண்டுள்ளனர் என்றார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய செங்கம் வா.முருகனுக்கு சால்வை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில திமுக இலக்கிய அணி செயலாளர் போர்முரசு கதிரவன், சிறப்பு பேச்சாளர்களாக தலைமைக் கழக பேச்சாளர் ஆனைமலை அதிரடி அல்த்தாப், கிருஷ்ணகிரி கலை இலக்கிய பகுத்தரிவு பேரவை துணை தலைவர் ஆர்.எஸ்.கிரி, பொன்.சாரங்கப்பாணி, வ.முனிரத்தினம், வழக்கறிஞர் பி.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மீண்டும் தமிழ்நாட்டில் திமுக 7வது முறை ஆட்சி அமைக்கவும், தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வராக தமிழ்நாட்டில் கர்நாடகத்தில் கழகத் தோழர்களின் சொந்த பந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி இங்குள்ள தோழர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும் என திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
































































