முகப்பு Bengaluru 10 நாட்கள் நடக்கும் 4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா: டிச. 5ஆம் தேதி தொடக்கி வைக்கிறார்...

10 நாட்கள் நடக்கும் 4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா: டிச. 5ஆம் தேதி தொடக்கி வைக்கிறார் இஸ்ரோ தலைவர் டாக்டர். வி. நாராயணன்

10 நாட்களும் இலக்கிய மாலை, சிந்தனைக்களம், கலை மாலை, நூல் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு

78
0

பெங்களூரு, நவ. 29: பெங்களூரில் டிச.5 முதல் 14ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு 4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை 4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் மதிப்புறு தலைவர் மா. கார்த்தியாயினி செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 2022ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் நடைபெற்ற மூன்று தமிழ்ப் புத்தகத் திருவிழாகளும் சிறப்பாக நடைபெற்றதற்கு தமிழ் ஊடகங்கள் தான் முக்கிய காரணம். அந்த ஊடகத்துறையின் துணையோடு 4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா டிச.5 முதல் 14ஆம் தேதி வரை பெங்களூரு, வசந்த்நகரில் டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் வீதியில் விதானசௌதா அருகில் இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில் உள்ள தி இன்ஸ்டிடுயூட் ஆஃப் எஞ்சினியர்ஸ் வளாகத்தில் நடத்தப்படவிருக்கிறது.

நிகழ்ச்சிகள் அனைத்தும் திரு. முத்துசெல்வன் திடல், புலவர் கி.சு.இளங்கோவன் அரங்கம், பேரா.முனை. கு.வணங்காமுடி மேடையில் நடக்கவிருக்கிறது. இந்த திருவிழாவில் மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்படவிருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்களுக்காக நடத்தப்படும் இந்த விழாவில் கன்னட, ஆங்கில நூல்களும் விற்பனைக்கு கிடைக்கும். கன்னட நூல்களுக்காக 3 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

டிச.5ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் வ. இராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடக்கும் தொடக்கவிழாவில் இஸ்ரோ தலைவர் டாக்டர். வி. நாராயணன் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை தொடக்கிவைக்க இருக்கிறார். தினகரன் நாளிதழ் மேலாண் இயக்குநர் திரு. ஆர். எம். ஆர். இரமேஷ், தொழிலதிபர் திரு. வீ. க. செல்வக்குமார், தமிழறிஞர் திரு. சு. குமணராசன், கல்வியாளர் முனைவர் சேதுகுமணன், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் திரு. வீராணம் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

டிச.6ஆம் தேதி காலை 11 மணிக்கு டாக்டர் வ. இராம்பிரசாத் மனோகர் எழுதிய ‘கருவில் இருந்து கலெக்டர் வரை’ நூல் அறிமுகவிழா நடக்கவிருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் திருமதி. ஜி.ஆர். ஜே.திவ்யாபிரபு நூலை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 2 மணிக்கு கன்னடக் கலையரங்கத்தை மாண்புமிகு அமைச்சர்கள் திரு கே.ஜே. ஜார்ஜ், திரு.தினேஷ்குண்டுராவ் தொடக்கி வைக்கிறார்கள். மாலை 3 மணிக்கு கன்னட நூல்கள் வெளியீட்டுவிழா நடக்கிறது. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பேரா.எஸ்.ஜி.சித்தராமையா நூலை வெளியிட்டு பேசுகிறார்.

மாலை 6 மணிக்கு சிறந்த தமிழ் நூல் போட்டி பரிசளிப்பு, ஆர்.பி.ஏ. என்.எம்.எஸ். பள்ளி முத்தமிழ் மன்ற மாணவர்களுக்கு பாராட்டு, கருநாடகத் தமிழர் முகவரி கையேடு வெளியீட்டுவிழா நடக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர் வெங்கடேஷ்குமார், கே.பி.சிவக்குமார் பங்கேற்று பரிசுகள் வழங்குகிறார்கள். டிச.8ஆம் நாள் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஐ.ஏ.எஸ். ஆர். வினோத்பிரியா தமிழோடு விளையாடு மாணாக்கர், ஆசிரியர், பொதுமக்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளை தொடக்கிவைக்கிறார்.

டிச. 9ஆம் நாள் மாலை 5 மணிக்கு முனைவர் தேவி இராஜேஷ் தலைமையில் பாவரங்கம், டிச.10ஆம் நாள் மாலை 4.30 மணிக்கு செஞ்சி ப. புருஷோத்தமன் குழுவினர் வழங்கும் ‘சன்மார்க்க வள்ளல்’ என்ற தலைப்பிலான வில்லுப்பாட்டு, மாலை 6 மணிக்கு திரு. செல்வ. இராமாநுசன் தலைமையில் ‘இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் துணைநிற்பது புத்தகங்களே! அலைபேசிகளே! என்ற தலைப்பில் பட்டிமன்றம், டிச. 11ஆம் நாள் மாலை 6 மணிக்கு மதுரை ஜெயமணிகண்டன் குழுவினரின் ‘வள்ளி திருமணம்’ கூத்து, டிச.12ஆம் நாள் மாலை 5 மணிக்கு நம்ம ஊர் தமிழ் மக்கள் குழுவினரின் சிலம்பாட்டம், டிச. 13ஆம் நாள் 4.30 மணிக்கு தன்னுரிமை மனம்கிழ் மன்றத்தாரின் ‘உஷாரய்யா உஷாரு’ நாடகம் நடக்கவிருக்கின்றன.

டிச. 7ஆம் நாள் மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி. டில்லிபாபு எழுதியுள்ள நூலை விண்வெளி அறிவியலறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டு பேசுகிறார். தினமும் மாலை 6 மணிக்கு நடக்கும் சிந்தனைக்களத்தில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்கள் திரு. வி. பி. ஆர். இளம்பரிதி, திரு. மு. நடேசன், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தமிழறிஞர் திரு.ம.சோ. விக்டர், இலக்கிய பேச்சாளர் திரு.தாமல் கோ. சரவணன், ஐஏஎஸ் அதிகாரி திரு. ஆர். செல்வமணி, இயக்குநர் திரு. கே.பாக்யராஜ், ஐஏஎஸ் அதிகாரி திரு. முல்லைமுகிலன், இலக்கிய பேச்சாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் சிந்தனையுரை ஆற்றுகிறார்கள்.

டிச. 14ஆம் நாள் மாலை 3 மணிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி. முருகன் தலைமையில் நடக்கும் நிறைவு விழாவில் கருநாடக அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர். எஸ். செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு. கர்நாடகத்தில் தமிழ்மொழிக்கும், தமிழர்களின் நல்வாழ்வுக்கும் தொண்டாற்றிய பன்முகத்திறன்வாய்ந்த சான்றோர் பெருமக்களுக்கு கருநாடகத் தமிழ்ப்ம்பெருந்தகை விருது. கருநாடகத் தமிழ் ஆளுமை விருது, கருநாடக சீர்மிகு செந்தமிழ் பள்ளி விருது, கருநாடக சீர்மிகு செந்தமிழ்க் கல்லூரி விருது, கருநாடக சீர்மிகு தமிழ் அமைப்பு விருது ஆகியவற்றை உள்ளடக்கிய 2025ஆம் ஆண்டுக்கான கருநாடகத் தமிழ் விருதுகள் வழங்கவிருக்கிறார். இந்த விழாவில் மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி டாக்டர். எஸ். வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

பெங்களூரு, கோலார்தங்கவயல் மட்டுமல்லாமல், மைசூரு, பத்ராவதி, சிவமொக்கா பகுதிகளில் செயல்படும் தமிழ்ச்சான்றோர்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ் அமைப்புகளையும் கருநாடகத் தமிழ் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கருநாடகத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக மற்றும் தமிழ்ப்பணியாற்றி வரும் தமிழ் செயற்பாட்டாளர் திரு.வீ.மு.வேலு அவர்களுக்கு கர்நாடகத் தமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப்படுகிறது. தமிழ்ச்சான்றோர்கள் 42 பேருக்கு கருநாடகத் தமிழ் ஆளுமை விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. கருநாடகத்தில் அயராமல் தமிழ்ப்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்ப்பள்ளிகள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகளுக்கு சீர்மிகு செந்தமிழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல்களுக்கான போட்டியில் வெற்றிபெறும் நூல்களுக்கு ரூ.42,000 பரிசு வழங்கப்படுகிறது. மாணவர்கள். ஆசிரியர்கள், பொதுமக்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 1.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. விழாவில் கவியரங்கம். கருத்தரங்கம், பட்டிமன்றம், தமிழ் மரபுக்கலைகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. அதேபோல, தமிழ்மரபுவிளையாட்டுகள், தமிழ் மரபு தின்பண்டங்கள், தமிழ் மரபு சித்த மருத்துவமுகாம் திருவிழாவில் இடம்பெறுகிறது. இந்தாண்டு நாள்தோறும் 10 நாட்களுக்கு தமிழ் மரபு விளையாட்டுப்போட்டிகள் நடக்கின்றன.

4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவையொட்டி கருநாடகத்தில் நீண்டகாலமாக வாழும் தமிழர்களின் மொழி, கலை, இலக்கியம், சமயம், பண்பாடு, தொழில், வாழ்வியல் சார்ந்த செய்திகள் அடங்கிய வரலாற்றுப் பெட்டகமாக சிறப்புமலர் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்புமலர், கருநாடகத்தில் தமிழர்களின் அடையாளங்கள் என்ற பொருண்மையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியத்துவம்வாய்ந்த பல கட்டுரைகள் இடம்பெறுகிரது. 120க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்புமலர், கருநாடகத் தமிழ் இதழாளர் நாள் கொண்டாடப்படும் 2026ஆம் ஆண்டு பிப். 7ஆம் தேதி நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.

ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ரூ.100 மதிப்புள்ள 3,000 புத்தகப் பரிசுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு, கருநாடகத்தை சேர்ந்த பதிப்பாளர்கள் நூல் அங்காடிகளை அமைக்கவிருக்கிறார்கள். இந்த அங்காடிகளில் புத்தகப் பரிசுச்சீட்டுகளை நூல்களாக மாணவர்கள் மாற்றிக்கொள்ளலாம்.

4ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவுக்கு பெங்களூரு, கோலார்தங்கவயல், மைசூரு உள்ளிட்ட கருநாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலரும் வருகை தரவிருக்கிறார்கள் என்றார். பேட்டியின் போது தமிழ்ப் புத்தகத் திருவிழா மதிப்புமிகு வழிகாட்டிகள் திரு.கோ.மணிவாசகம், திரு.தி.கோ.தாமோதரன், திரு. அ.மதுசூதனபாபு. திரு.இராஜகோபால பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கூடுதல் விவரங்களை https://tamilbookfestival.com என்ற இணையதளத்தில் பெறலாம்.

தொடர்புக்கு: 6363118988

தமிழ்ப்_புத்தகத் திருவிழா_2025 #thamizh_putthaga_thiruvizha_2025

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்