முகப்பு Bengaluru திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி: பையப்பனஹள்ளி டாக்டர்...

திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி: பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

70
0

பெங்களூரு, ஆக. 10: திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தில் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பையப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள‌ திருவள்ளுவர் சிலை திறப்பு 17 ஆண்டுகளுக்கு முன்பு ஆக. 9 ஆம் தேதி நிறுவப்பட்டது. சிலை நிறுவப்பட்ட தினத்தை சிறப்பாக கொண்டாட டாக்டர் டி.ரமேஷ் தலைமையிலான விஸ்வகவி திருவள்ளுவர் சங்கம் முடிவு செய்து, தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) நடைபெற்ற திருவள்ளுவர் சிலை நிறுவிய தினக் கொண்டாட்டத்தில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பேசிய பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள‌ திருவள்ளுவர் சிலை 2009 ஆண்டு ஆக. 9 ஆம் தேதி பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு அமைக்கப்பட்டது. இதற்கு அரும்பாடு பட்ட அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதி, கர்நாடகத்தின் அன்றைய முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவள்ளுவர் சிலை நிறுவிய தினத்தில் தமிழர்கள் மட்டுமின்றி, பிற மொழியினரும், ஜாதி, மதம், மொழி கடந்து தமிழர்களும் ஓர் அணியில் திரண்டும் வந்து, திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்ற ஒற்றுமையை நாம் வரும் காலங்களிலும் காண்பித்து, தமிழர்களின் பலத்தை எடுத்து காட்ட வேண்டும் என்றார்.

பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார் கூறியது: பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை திறக்க பலர் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைவு கூற நாம் கடமை பட்டுள்ளோம். அவர்கள் நடத்திய போராட்டங்களின் காரணமாக இங்கு நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை, மரியாதை செய்து நாம் கொண்டாடி வருகிறோம் என்றார்.

நிகழ்வில், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் தி.கோ.தாமோதரன், இராசு.மாறன், செயலாளர் வா.ஸ்ரீதரன், தற்போதைய நிர்வாகிகள் கோபிநாத், இராம. இளங்கோவன், அமுத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்