பெங்களூரு, நவ. 22: தமிழ் இதழியலின் மனசாட்சியாக விளங்கியவர் முரசொலி செல்வம் என்று கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தலைவர் முத்துமணி நன்னன் தெரிவித்தார்.
கர்நாடக மாநில திமுக சார்பில் அலுவலகம் கலைஞரக வளாகம்,தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மறைந்த முரசொலி செல்வம் படத்திறப்பும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் பொருப்புக் குழு உறுப்பினர் ஏ.டி.ஆனந்தராஜ் வரவேற்று கூட்டத்திற்கு மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி அவர்கள் தலைமையில், கருநாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் முத்துமணி நன்னன், முரசொலி செல்வம் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியது: திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது இதழ்கள் தான். பெரியாரின் குடியரசு ஏற்படுத்தி வந்த சமுதாய மாற்றங்களை உள்வாங்கிக்கொண்ட கலைஞர் மு.கருணாநிதி, 1942ஆம் ஆண்டு கையெழுத்து ஏடாக முரசொலியை தொடங்கினார். அன்று முதல் திராவிட இயக்கத்தின் வேலாகவும், வாளாகவும் விளங்கி வருகிறது முரசொலி. 1969ஆம் ஆண்டு முதல்வர் பதவியை ஏற்கும் வரை முரசொலி ஏட்டின் ஆசிரியராக பணியாற்றிய கலைஞர் மு.கருணாநிதி, முரசொலி தனது முதல் குழந்தை என்று பெருமிதம் பொங்க கூறிவந்தார்.

உடன்பிறப்பு கடிதங்கள், கரிகாலன் பதில்கள், கலைஞர் அறிக்கைகள் எழுதுவதில் மட்டுமல்ல, துணுக்குகள், பெட்டிகள் செய்திகள், நையாண்டிகள், சித்திர செய்திகள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். தமிழ் இதழியலில் பல்வேறு புதுமைகளை புகுத்திய கலைஞர் மு.கருணாநிதி, முரசொலி நாளிதழை திராவிட இயக்கத்தின் கொள்கை முரசமாக மட்டுமல்லாது, தமிழ், தமிழர் நலன்சார்ந்த கட்டுரைகளால் நிறைத்திருந்தார். அதனால் திராவிட இயக்கத்தின் தீரர்களிடையே முரசொலிக்கு செல்வாக்கு பெருகியது.
புதிய ஆசிரியராக பொறுப்பேற்ற மாறன், கலைஞர் மு.கருணாநிதி வகுத்து தந்தை பாதையில் முரசொலியை நடத்தி வந்தார். முரசொலியின் கட்டுரைகள் ஆளுங்கட்சியை பதம்பார்த்து வந்ததை வரலாற்றுச்சுவடிகள் கம்பீரமாக எடுத்துக்கூறுகின்றன. 1989இல் முரசொலி மாறன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும், ஆசிரியர் பொறுப்பு அவரது தம்பியும், கலைஞர் மு.கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வத்தை வந்தடைகிறது. ஆசிரியராக பொறுப்பேற்ற கொஞ்ச நாளில், 1990இல் ஜன.30ஆம் தேதி திமுக அரசு கலைக்கப்படுகிறது.
அந்த செய்தியை ‘ஜனநாயக படுகொலை’ என்ற தலைப்பிட்டு முரசொலியில் செல்வம் வெளியிட்டிருந்தார். அதே ஆண்டில் மே 21ஆம் தேதி ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, சென்னையில் இருந்த முரசொலி அலுவலகம் அரசியல் எதிரிகளால் சூறையாடப்பட்டு, அச்சகம் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டது. அதனால் துவண்டுவிடாத முரசொலி செல்வம், பெருமுயற்சியில் மறுநாள் முரசொலி நாளிதழை வெளியிட்டார். அன்றைக்கு முரசொலியின் தலைப்புச்செய்தி ‘Murasoli will take it’ (இதை முரசொலி எதிர்கொள்ளும்) என்றிருந்தது.

சட்டப்பேரவையின் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செய்தியை வெளியிட்டதற்காக உலகவரலாற்றில் இதுவரை எங்கும் காணாத வகையில், குற்றவாளி கூண்டு அமைத்து அதில் முரசொலி ஆசிரியரான செல்வத்தை நிறுத்தி அவமானப்படுத்த முனைந்தவர் ஜெயலலிதா. ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் செயலில் ஈடுபட்ட ஜெயலலிதாவுக்கு சுதந்திர சிந்தனை கொண்ட இதழ்கள், இதழாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அன்றைக்கு கூண்டில் நின்றிருந்த முரசொலி செல்வத்தின் தீர்க்கமான பார்வை, அடக்குமுறைக்கு அசைந்து கொடுக்காத முகபாவம், எதற்கும் அஞ்சேன் என்பதுபோன்ற தோற்றம் ஆகியவற்றை கண்ட கலைஞர் மு.கருணாநிதி, மறுநாள் முரசொலியில் ‘கூண்டு கண்டேன், குதூகம் கொண்டேன்’ என்று உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியிருந்தார். எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல்வாய்ந்த இதழாளராக முரசொலி செல்வம் விளங்கினார். ‘சிலந்தி’ என்ற புனைப்பெயரில் பெட்டிச்செய்திகளை எழுதுவதில் வல்லவராக விளங்கிய முரசொலி செல்வத்தின் எழுத்து, அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளுக்கு முள்ளாக இருந்து வந்தது.
எழுத்தில் கூர்மையான கருத்துகளை தெரிவித்து வந்த முரசொலி செல்வம், தமிழ் இதழியலின் மனசாட்சியாக விளங்கியவர். இதழாளர்களாக செயல்படும்போது வெளிப்படுத்த வேண்டிய தீரத்தை தனது எழுத்து, செயல்கள் மூலம் சுட்டிக்காட்டியவர் முரசொலி செல்வம். 1780ஆம் ஆண்டு ஜன.29ஆம் தேதி இந்தியாவின் முதல் நாளிதழான ‘பெங்கால் கெசட்’ஐ தொடங்கியவர் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி. அன்றைய பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹாஸ்டிங்கின் ஊழல்கள், அடக்குமுறைகள், கொடுங்கோன்மைகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் ‘பெங்கால் கெசட்’ இதழில் வெளியிட்டவர். இதனால் ஆத்திரமடைந்த வாரன் ஹாஸ்டிங், ஜேம்ஸ் ஹிக்கியை சிறையில் அடைத்து, துன்புறுத்தினார்.

ஆனாலும் சிறையில் இருந்தபடியே பத்திரிகையை நடத்தினார். இதை சகித்துக்கொள்ளா வாரம் ஹாஸ்டிங் உச்சநீதிமன்றத்தின் மூலமாக ‘பெங்கால் கெசட்’ இதழை முடக்கினார். இந்தியாவின் முதல் இதழுக்கு ஏற்பட்ட அடக்குமுறை, இன்றைக்கும் தொடர்கிறது. எனினும், முரசொலி செல்வம் போன்ற இதழாளர்கள் துணிச்சலுடன் போராடி, ஜனநாயகத்தை காப்பாற்ற தொடர்ந்து போராடி வந்தனர். முரசொலி செல்வத்தின் வழியில் அடுத்தடுத்த தலைமுறைகள் இதழியலுக்கு பங்காற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ் இதழியலில் முரசொலி செல்வத்தின் பங்களிப்பு மகத்தானது என்பதை காலம் கண்டிப்பாக வரலாற்றில் பொறிக்கும். முரசொலி செல்வத்தின் புகழ் ஓங்குக, தமிழ் இதழியல் வெல்க! என்று அவர் பேசினார்.
புகழஞ்சலி கூட்டத்தில் இலக்கியணி செயலாளர் போர் முரசு கதிரவன், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் விஎஸ்மணி, முன்னாள் பொதுக்குழு கே.எஸ்.சுந்தரேசன், பொதுக்குழு உறுப்பினர் முருக மணி செல்வம், பத்திரிகையாளர்கள் மதியழகன், இரா.வினோத், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மு.இராஜசேகர், மகளிரணி நிர்வாகிகள் சற்குணா இமதி, பி.காயத்திரி, கிளைக்கழக செயலாளர்கள், ஜி. நாகராஜ், கரிகாலவளவன் ஆகியோர் புகழுரை ஆற்றினர் மாநில தி.மு.க துணை அமைப்பாளர் ஜி.இராமலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.
































































