பெங்களூரு, நவ. 23: வலிப்பு நோயைத் துல்லியமாகக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் நீண்டகாலமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் ஆகியவற்றுக்கான விரிவான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் நோக்கில், சர்ஜாபூர் சாலையில் உள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனை, பிரத்யேக வலிப்பு நோய் சிகிச்சைப் பிரிவைத் தொடங்கியுள்ளது. வலிப்பு ஏற்படும் நோயாளிகள், குறிப்பாகச் சிக்கலான மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சையை இப்பிரிவின் மூலம் பெறலாம். ஒவ்வொரு புதன்கிழமையும் சர்ஜாபூர் சாலையில் உள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.
உலகளவில் சுமார் 5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏறத்தாழ 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 1.2 கோடி பேர் வலிப்பு நோயுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய பாதிப்பில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்காகும். மேலும், சுமார் 20 முதல் 30 லட்சம் பேர் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாகக் காணப்படும் நரம்பியல் கோளாறுகளில் ஒன்றாக இருந்தாலும், வலிப்பு நோய் குறித்து சமூகத்தில் இன்னும் பல தவறான புரிதல்கள் நிலவுகின்றன. இதனால் நோயைக் கண்டறிவதில் தாமதம், போதிய சிகிச்சை கிடைக்காமை மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வலிப்பு நோய் என்பது ஒரே வகையான நோய் அல்ல; வெவ்வேறு காரணங்கள், வலிப்பு ஏற்படும் விதங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்ட பல்வேறு நிலைகளின் தொகுப்பாகும். எனவே, ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கும் ஏற்ப தனிப்பட்ட சிகிச்சை அளிப்பது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சிகிச்சைப் பிரிவில், வலிப்பு நோய் சிகிச்சையில் அனுபவமுள்ள நிபுணர் மூலம் விரிவான மருத்துவ மதிப்பீடும், வலிப்பு வகைகளைத் துல்லியமாக வகைப்படுத்தும் சேவையும் வழங்கப்படும். இதற்கு ஆதரவாக, வழக்கமான ஸ்கால்ப் எலக்ட்ரோஎன்செபலோகிராபி (EEG), வீடியோ இஇஜி கண்காணிப்பு, வலிப்பு நோய்க்கெனத் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் மூளை எம்.ஆர்.ஐ. (MRI), செயல்பாட்டு எம்.ஆர்.ஐ. (Functional MRI), மூளை பெட் ஸ்கேன் மற்றும் நரம்பியல் கதிரியக்கவியல் நிபுணர்களின் விரிவான மதிப்பீடு ஆகிய வசதிகளும் உள்ளன. சரியான சிகிச்சைத் திட்டத்தைத் தீர்மானிப்பதற்காக, நரம்பியல்-உளவியல் மதிப்பீடுகள் மற்றும் செயல்பாட்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனைகளும் நோயாளிகளுக்குக் கிடைக்கும்.
மேம்பட்ட மருத்துவத் தலையீடுகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய விரிவான மதிப்பீடு, அறுவைச் சிகிச்சை சிகிச்சைமுறைகள், நரம்புத் தூண்டுதல் சிகிச்சைகள் (Neuromodulation) மற்றும் நரம்பியல் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படும். மருத்துவ ரீதியாகத் தேவைப்படும் இடங்களில், எலக்ட்ரோகார்டிகோகிராபி, மூளைப் புறணிப் பகுதி வரைபடமிடுதல் (Cortical Mapping), உடல் உணர்வு சார்ந்த தூண்டப்பட்ட மின் சிக்னல் பரிசோதனைகள் (Somatosensory Evoked Potentials) மற்றும் இயக்கம் சார்ந்த தூண்டப்பட்ட மின் சிக்னல் பரிசோதனைகள் (Motor Evoked Potentials) போன்ற நரம்பு மண்டலச் செயல்பாட்டு நுட்பங்கள், அறுவைச் சிகிச்சைத் திட்டமிடலுக்கும் மூளையின் முக்கிய செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் உதவும்.
இதுகுறித்து ஸ்பர்ஷ் மருத்துவமனை, சர்ஜாபூர் சாலையின் மூத்த ஆலோசகர் – நரம்பியல் நிபுணரும் வலிப்பு நோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பாலாஜி பி. எஸ். கூறுகையில்: “வலிப்பு நோய் என்பது ஒரே வகையான நோய் அல்ல. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன; வலிப்பு ஏற்படும் விதங்களும் சிகிச்சை முறைகளும் மாறுபடும். எனவே, வலிப்பு நோய்க்கான பயனுள்ள சிகிச்சை என்பது வலிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைப் பரிந்துரைப்பதுடன் மட்டும் முடிந்துவிடக் கூடாது. துல்லியமான நோய் கண்டறிதல், சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளால் பயனடையக்கூடிய நோயாளிகளை உரிய நேரத்தில் அடையாளம் காணுதல் ஆகியவை சிறந்த முறையில் வலிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இன்றியமையாதவை. இந்தப் பிரத்யேக சிகிச்சைப் பிரிவின் மூலம், ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவைகளையும் கருத்தில் கொண்டு, அவருக்கேற்ற பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குவதே எங்கள் நோக்கம். நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் இந்த நோயைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளவும், தவறான நம்பிக்கைகளைக் களையவும், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
இந்தப் பிரிவு தொடங்கப்பட்டதுகுறித்து ஸ்பர்ஷ் மருத்துவமனை, சர்ஜாபூர் சாலையின் ஆலோசகர் – வலிப்பு நோய் மற்றும் செயல்பாட்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் நிஹால் அஹ்மத் கூறுகையில்: “மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை என்பது பெரும்பாலும் கடைசி முயற்சி மட்டுமல்ல; வலிப்பிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் ஒரு முக்கிய வாய்ப்பாகும். இரண்டு வகையான மருந்து சிகிச்சை முயற்சிகளுக்குப் பிறகும் வலிப்பு கட்டுப்படவில்லை என்றால், அறுவைச் சிகிச்சைக்கான மதிப்பீட்டைத் தாமதப்படுத்துவது நோயாளியின் அறிவாற்றல் நலனையும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கக்கூடும். நவீன வலிப்பு நோய் அறுவைச் சிகிச்சையில் மிகத் துல்லியமான செயல்முறை மிகவும் அவசியம். எங்கள் சர்ஜாபூர் மருத்துவமனைப் பிரிவில், மூளையின் முக்கிய நரம்பியல் செயல்பாட்டுப் பாதைகளைப் பாதுகாத்தபடியே வலிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூளையின் செயல்பாடுகளை எங்கள் குழுவினர் மிகுந்த துல்லியத்துடன் வரைபடமிட்டு அடையாளம் காண முடியும்” என்றார்.
இந்தச் சிகிச்சைப் பிரிவு, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், சிறார்கள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு மட்டுமின்றி, புதிதாக வலிப்பு ஏற்படும் அல்லது மீண்டும் மீண்டும் வலிப்பு ஏற்படும் பெரியவர்களுக்கும் சேவை வழங்கும். மேலும், வலிப்பு நோய்க்காகச் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உரிய மருந்துகளை எடுத்துக்கொண்ட பின்னரும் வலிப்பு கட்டுப்படாத நோயாளிகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். நோய் கண்டறிதலில் நிபுணத்துவம், மேம்பட்ட சிகிச்சை வாய்ப்புகள் மற்றும் மறுவாழ்வு சேவைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், வலிப்பு நோயுடன் வாழும் மக்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பையும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் வழங்க ஸ்பர்ஷ் மருத்துவமனை இலக்காகக் கொண்டுள்ளது.





























































