முகப்பு Bengaluru த‌மிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும்: டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை

த‌மிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும்: டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை

92
0

பெங்களூரு, டிச. 8: த‌மிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்று தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் ஆளுநர் குழுவின் தலைவர் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார்.

பெங்களூரில் நடைபெறும் தமிழ்ப் புத்தக திருவிழாவில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய புத்தகத்தை ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை வெளியிட்டு பேசியது: ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு எழுதி இருக்கும் வெள்ளோட்டம் வெல்லட்டும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நூல் கடந்தாண்டு வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. இடையில் நூல் ஆசிரியரின் தாயார் மரணமடைந்தார். அதன் காரணமாக ஓராண்டு கழித்து வெளியிடப்படுகிறது.

நமது தமிழ் சமுதாயம், குறிப்பாக இளைஞர்கள் நமது தாய் மொழியில் அறிவியல் நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆவலில் நூல் ஆசிரியர் ஏற்கனவே 9 நூல்கள் தமிழ் மொழியில் எழுதிய நிலையில் 10 வது நூலாக வெள்ளோட்டம் வெல்லட்டும் என்ற நூல் வெளியிட்டுள்ளார். தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இலக்கிய நயத்துடன் அறிவியலைச் சொல்ல முடியும். அதனைதான் ஆசிரியர் இந்த புத்தகத்தில் செய்துள்ளார்.

அமெரிக்கா கண்டுபிடிக்க முடியாத நீர் நிலைகளை கண்டு பிடித்தவர்கள் நாம். சொல்ல நினைப்பதை தாய்மொழியில் சொல்ல வேண்டும்.மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியாக இருப்பது தமிழ். தமிழர்களாக நாம் பிறந்துள்ளது நமக்கு கிடைக்க வரம்.

இயல், இசை, கூத்து என்ற முத்தமிழுடன் நான்காவது மொழியாக த‌மிழ் இருக்க வேண்டும். த‌மிழில் அறிவியல் நூல்கள் வர வேண்டும். பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் உலக மொழிக் கெல்லாம் மூத்த மொழியாக தமிழ் இருக்கும் போது நமக்கு வேறு மொழியின் அவசியம் இல்லை.


வெள்ளோட்டம் வெல்லட்டும் என்ற நூலில் கேள்வி பதில்கள் வைத்து எளிமையாக எழுதி உள்ளார். இதை தமிழர்கள் படித்த பயன்பெற வேண்டும். ஆங்கிலம் ஆதிக்க மொழியாக கருதப்பட்டாலும் நமது தாய்மொழியான தமிழ் மொழிக்கு இணை வேறு இல்லை. நமது மொழியில் எழுதி இருக்கும் நூல் வரலாற்றில் இடம் பிடிக்கும், த‌மிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்றார்.

பின்னர் ஏற்புரையில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, அறிவியல் தொழில் நுட்பங்கள் பொது வெளியில் விவாதிக்கப்பட வேண்டும் அப்போது தான் அதன் பயன் சாதாரண மக்களை சென்றடையும் என தெரிவித்தார்.

மேலும், அறிவியல் தொழில் நுட்பம், அனைவருக்கும் பொதுவானதாகும். தொழில் நுட்பங்கள் பொது வெளியில் விவாதிக்கப்பட்டால் மட்டுமே அதன் பயன் சாதாரண மக்களை சென்றடையும். பணம் சம்பாதிக்க புத்தகம் எழுதவில்லை. நான் எழுதும் புத்தகத்தை கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் சிறுமியும் படிக்க வேண்டும். எல்லோரும் அறிவியலைப் பற்றி தெரிந்து கொண்டால், எனக்கு மிக்க மகிழ்ச்சி. இப்போது அறிவியல் உங்கள் வாழ்வில் நுழைந்துவிட்டது.

அறிவியலை நாள்தோறும் பேச வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு நடைபெறும் ஆராய்ச்சிகளின் பயன்கள் மக்களை சென்றதடைந்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதற்கு உதாரணமாக வெண்மை புரட்சியை கூற முடியும். நாடு விடுதலை அடைந்த போது நாட்டில் உணவு பற்றாக்குறை காணப்பட்டது. அது போல் பால் பொருட்களின் தேவையும் அதிகம் ஏற்பட்டது. இந்தியாவில் பால் பொருட்களின் தேவையை இறக்குமதி ஈடு செய்தது.

அந்த நேரத்தில் விஞ்ஞானிகள் வர்க்கிஸ் குரியன், அரிசந்த் தாலியா பால் உற்பத்தியை எப்படி அதிகரிக்க செய்வது என்பதற்காக ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதற்காக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் சென்று எருமை பாலை எப்படி உலர செய்து, பவுடர் தயாரிக்கலாம் என்கிற ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. எருமை பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து காணப்பட்டதால் அதை பவுடர் ஆக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால், தொடர்ந்து நடந்த ஆராய்ச்சியில் எருமை பாலில் இருந்து கொழுப்புகள் நீக்கும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டதால் இந்தியாவில் வெண்மை புரட்சி வெற்றி அடைந்தது. போர் விமானம், கப்பல்களில் தற்போது நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டும் இன்றி செயற்கை தொழில் நுட்பம், செல்போன்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கின்றன. என்னுடைய புத்தகத்தில் அறிவியல் தொழில் நுட்பங்கள் வெள்ளோட்டமாக தெரிவித்துள்ளேன் என்றார்.

முன்னதாக, பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இப் போட்டியில் பங்கேற்றனர். பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல் பாடும் போட்டி, தமிழோடு விளையாடு, கதை சொல்லும் போட்டி ஆகியன நடைபெற்றன. இதில் 10 ஆசிரியர்கள், 17 பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் ரூபாய் 1000 மதிப்பிலான புத்தக கூப்பன்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இப்போட்டிகளுக்கான பரிசளிக்கும் விழாவான வெற்றி அரங்கம் நடைபெற்றது. இதற்கு இந்திய பேனா நண்பர் பேரவையின் துணைத்தலைவர், பிரேம் பிரகாஷ் மற்றும் இந்திய பேனா நண்பர் பேரவையின் அறங்காவலர் பா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரிசு பெற்றோருக்கு இந்திய பேனா நண்பர் பேரவையின் தலைவர் மா. கருண் அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழிசை அரங்கம் நடைபெற்றது. திருமலைச்செல்வனின் ஜோதி மெலோடிஸ் வழங்கிய “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற தமிழிசை அரங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்