முகப்பு Exhibition Tamil Book Festival-2022 : பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் டிச. 25 முதல் 8 நாட்கள்...

Tamil Book Festival-2022 : பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் டிச. 25 முதல் 8 நாட்கள் தமிழ்ப் புத்தகத் திருவிழா-2022

0

பெங்களூரு, டிச. 2: பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் டிச. 25 முதல் ஜன. 1 ஆம் தேதி வரை தமிழ்ப் புத்தகத் திருவிழா-2022 நடைபெற உள்ளது.

இது குறித்து திருவிழா குழுவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் ஆகியவற்றின் முன்னெடுப்பில் பெங்களூரு, அல்சூர் பகுதியில் உள்ள பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கத்தில் 25.12.2022 முதல் 01.01.2023 வரை தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

கருநாடகத்தில் வாழும் தமிழர்களிடையே தாய்மொழியாம் தமிழை கற்கும் ஆவலை ஊக்குவிக்க‌வும், குழந்தைகள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக தமிழர்கள் ஒன்றுக்கூடவும் பெங்களூரில் முதல்முறையாக தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

திருவிழாவில், ஆசை தீர படிப்பதற்கும், சிந்தையை கிளறி விடுவதற்கும், அறிவு பரப்பை உலக அளவுக்கு உயர்த்தவும் புத்தகப் புதையலை காணலாம்!

கேட்க கேட்க தெவிட்டாத தேனமுதாய் மணம்வீசும் பேச்சாளர்களின் உரைவீச்சுகள், நூல் வெளியீடுகள், மாணவர்களின் தமிழ்க்கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன!

கடந்த ஆயிரம் ஆண்டில் கருநாடகத் தமிழர்கள் கடந்து வந்த பாதையை படம்பிடிக்கும் வரலாற்றுப் பெட்டகமாக‌ தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்புமலர் வெளியிடப்படுகிறது!

கருநாடகத்தில் தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட நல்லாசான்கள், இலக்கியவாதிகள் போற்றி பாராட்டப்படுகிறார்கள்!

குழந்தைகளின் அறிவுத்தரத்தையும், உடல் திறத்தையும் மேம்படுத்தும் தமிழ் மரபு விளையாட்டுகள், நாவில் எச்சில் ஊறும் தமிழ் மரபு தின்பண்டங்கள் காத்திருக்கின்றன!

நூல்களை வாங்கி படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க திருவிழாவுக்கு முதலில் வருகை தரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக பரிசுச்சீட்டுகள் வழங்கப்படும்!

அறிவுத்தளத்தில் அயராது பணியாற்றும் அறிஞர் பெருமக்களின் எழுத்தாற்றலை போற்றும் சிறந்த நூல்களுக்கு பரிசுகள் அளிக்கப்படுகின்றன!

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவிர, பொதுமக்களுக்கும் கலந்துகொண்ட ஓவியம், கட்டுரை, சொற்பொழிவு, கவிதைப் போட்டிகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன!

வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்துவிட துடிக்கும் உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், இலக்கிய அறிஞர்கள் அருகருகே நின்று பேசப்போகிறார்கள்!

ஒரு நாள் வந்து பாருங்கள்…ஒவ்வொரு நாளும் ஓடோடி வருவீர்கள்…!
தமிழ்மணம் கமிழும், தமிழர் மனம் கூடும்…திருவிழா! நம்ம தமிழ்ப் புத்தகத் திருவிழா!
இது தமிழர்களுக்காக, தமிழர்களால் நடத்தப்படும் பெருவிழா! பெருமைப்படும் விழா!

வாருங்கள்…உங்களை அரவணைத்துக்கொள்ள தமிழ்ப் புத்தகங்கள் புத்தொளியாய் காத்திருக்கின்றன!
கருநாடகத் தமிழரின் முதல் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்…!
இனி ஆண்டுதோறும் நடக்கும் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை பாருங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கட்டுரைBangalore Arts and Crafts Mela : பெங்களூரில் 10 நாள் கலை மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சி தொடக்கம்
அடுத்த கட்டுரைToday Horoscope : இன்றைய ராசிபலன் (03.12.2022)

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்