முகப்பு Bengaluru வாழ்நாளில் தான் ஈட்டியதை, ஈன்ற மனிதர் எம்.ஜி.ஆர்: எஸ்.டி.குமார் புகழாரம்

வாழ்நாளில் தான் ஈட்டியதை, ஈன்ற மனிதர் எம்.ஜி.ஆர்: எஸ்.டி.குமார் புகழாரம்

0

பெங்களூரு, மார்ச் 3: வாழ்நாளில் தான் ஈட்டியதை, ஈன்ற மனிதர், தன்னை நம்பியவர்களை ஏமாற்றாதவர், நம்பியவர்களை நம்பியவர் எம்.ஜி.ஆர் என்று கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் புகழாரம் சூட்டினார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் 7வது கிராஸில் உள்ள திருவள்ளுவர் சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) திருவள்ளுவர் சங்க பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் நினைவு அறக்கட்டளை தொடக்க நிகழ்ச்சியில் அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி கௌரவித்த‌ பின்னர் டாக்டர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செய்த பின்னர் அவர் பேசியது: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரில் அறக்கட்டளையை தொடக்கி வைக்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு திருவள்ளுவர் சங்கத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சி தலைவர் மனிதநேய அடிப்படையில் செய்த சிலவற்றை இங்கு பதிவிட விரும்புகிறேன். அவர் மனித நேயமிக்க மாமனிதர். வாழ்நாளில் தான் ஈட்டியதை, ஈன்ற மனிதர். ஈன்றதனால் அவர் மறைந்தும் இன்றும் வாழ்ந்து வருகிறார். அவர் செய்த பல பணிகள் மற்றவர்களுக்கு புதிய பார்வையை தந்தது.

கைவண்டிகளை இழுத்துச் சென்றவர்களுக்கு மழை கோட்டும், பின்னர் சைக்கிள் ரிக்ஷாவை வழங்கியவர் எம்.ஜி.ஆர். தான் உழைத்த சொந்தப்பணத்தில் அதை அவர் வாங்கித் தந்தார். தானது சொந்தப்பணத்தை வாரி வழங்கிய வள்ளல் அவர். அவரை நம்பியவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து ஒரு செருப்பு தைப்பவரை கவனித்து வந்தார். அவர் இரண்டொரு நாள் தென்படாததால் அவரை பற்றி விசாரித்தார். அவரது மகன் திருமனத்திற்கு சென்றுள்ளதாகவும். அந்த அழைப்பிதழில் எம்.ஜி.ஆரின் படம் இருப்பதை கவனித்து, செருப்பு தைப்பவரின் மகன் திருமண நாள் அன்று அவர் நேரில் சென்று வாழ்த்தினார். தன்னை நம்பியவர்களை, உணர்ந்தவர்களை உணர்ந்தவர்தான் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சாதாரண தொண்டர் தனது திருமண அழைப்பிதழில் அவரது பெயர் போட்டு, திருமணத்தன்று, எம்.ஜி.ஆரின் வருகைக்காக காத்திருந்தார். ஆனால் எம்.ஜி.ஆரின் உதவியாளர் அந்த அழைப்பிதழை மேக்கப் பெட்டியின் அடியில் வைத்துவிட்டு மறந்திருந்தார். ஷூட்டிங்கிற்காக மேக்கப் போட வந்த எம்.ஜி.ஆர், அந்த அழைப்பிதழை கவனித்து, உதவியாளரை கடிந்து கொண்டு, ஷுட்டிங்கை கைவிட்டு, காரில் தொண்டரின் திருமணத்திற்கு புறப்பட்டார். கனமழையால் கார், ஒரு கி.மீ முன்பே நின்றுவிட்டது.

அதைப் பொருட்படுத்தாமல் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, மழை வெள்ளத்தில் நடந்து சென்றார். எம்.ஜி.ஆரை பார்த்த அப்பகுதி மக்கள் அவருடன் ஊர்வலம் போல நடந்து சென்றனர். திருமணத்தில் எம்.ஜி.ஆர் வருவார். அவர் வந்த பின்புதான் தாலி கட்டுவேன் என்று முகூர்த்த நேரம் முடிந்த பின்னரும் காத்திருந்த தொண்டருக்கு, தாலியை தன் கையால் எடுத்துக் கொடுத்து, திருமணத்தை நடத்திக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவரை நம்பியவர்களை எம்.ஜி.ஆர் ஏமாற்றியதில்லை. நம்பியவர்களை அவரும் நம்பினார். அவர் மனித நேரமிக்க மாமனிதராக திகழ்ந்தார். நடிக்கும் போது அவர் பின்னால் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவர் என்று அவருக்கு தெரியாது.

அவர் உழைத்த பணத்தில் தனுஷ்கோடி பேரிடருக்கு வாரி வழங்கினார். ஜவகர்லால் நேருவுக்கு சீனப்போரின் போது எம்.ஜி.ஆர் உதவினார். அவர் உடல் நலம் குன்றி அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தப்போதே அவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்து அரியணையில் மக்கள் அமர்த்தினர். இது புரட்சி இல்லையா. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இந்தியா திரும்பிய போது, வெடிச்சத்தங்களை மீறி, ஆனந்த அழுகுரல்கள் அதிக அளவில் கேட்கிறது. மக்களின் அன்பின் அழுகையைக் கண்டு, எம்.ஜி.ஆர் தானும் அழுகிறார். இதனால் அந்த வரவேற்பு நிகழ்ச்சி அழுகளமாக மாறியது. காரணம் மக்கள் தலைவனை நேசித்தார்கள். தலைவன் மக்களை நேசித்தார். அப்படி வாழ்ந்த தலைவர்தான் புரட்சித் தலைவர், பொன்னமனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர் இந்த மண்ணுலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருப்பார் என்றார்.

நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சங்கத்தலைவர் கி.சு.இளங்கோவன், செயலாளர் பிரபாகரன், துணைத் தலைவர் ரங்கநாதன், இணைச் செயலாளர் பொ.லட்சுமணன், பொருளாளர் தா.மு.ஜெயவேல், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ந.முத்துமணி, பொருளாளர் கே.தினகரவேலு, சுற்றுலா அமைப்பாளர் சடகோபன், ரவிக்குமார், எம்.ஆர்.பழம்நீ, திருவள்ளுவர் நற்பணிமன்ற செயலாளர் ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட திருவள்ளுவர் சங்க நிர்வாகிகள், மாநில அதிமுக நிர்வாகிகள், எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைமூத்த குடிமக்கள் ஆடம்பரமாக வாழும் இல்லமான‌ வேதாந்தா அனுகிரஹம் திறப்பு
அடுத்த கட்டுரைட்ரீமர்ஸ் யுனைடெட்: ஐடெக் உச்சிமாநாடு 2024 ஈர்க்கப்பட்ட அசாதாரண முயற்சிகள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்