முகப்பு Politics பெங்களூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா: தமிழக அமைச்சர்கள் சா.மு.நாசர், சி.வி.கணேசன், ஓசூர் மேயர் எச்.ஏ.சத்தியா...

பெங்களூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா: தமிழக அமைச்சர்கள் சா.மு.நாசர், சி.வி.கணேசன், ஓசூர் மேயர் எச்.ஏ.சத்தியா பங்கேற்பு

விழாவில் மைசூரு சூர்யா கணேஷ், தங்கவயல் க.கலையரசன்,ஆற்காடு அன்பழகன், ஜி.ராமலிங்கம், எஸ்.எஸ்.கே.மணி,பத்ராவதி எல்.சிவலிங்கம், மு.ராஜசேகர் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

0

பெங்களூரு, அக். 2: பெங்களூரில் கர்நாடக திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவையொட்டி நடைபெற்ற அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பேராசியரியர், முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய விருதுகளை தமிழக அமைச்சர்கள் சா.மு.நாசர், சி.வி.கணேசன், ஓசூர் மேயர் எச்.ஏ.சத்தியா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் பங்கேற்று வழங்கினர்.

பெங்களூரு ராமசந்திரபுரம் சாய்பாபா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ, ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநில திமுக அமைப்பாள ந.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அவைத்தலைவர் மொ.பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். கட்சியின் கொடியை மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி ஏற்றி வைத்தார். இதில் மைசூரு சூர்யா கணேஷீற்கு பெரியார் விருது, தங்கவயல் க.கலையரசனுக்கு அண்ணா விருது, ஆற்காடு அன்பழகனுக்கு கலைஞர் விருது, ஜி.ராமலிங்கம் பேராசிரியர் விருது, எஸ்.எஸ்.கே.மணிக்கு முரசொலி மாறன் விருது,பத்ராவதி எல்.சிவலிங்கத்திற்கு மு.க.ஸ்டாலின் விருது, மு.ராஜசேகருக்கு உதயநிதி ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவிகப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய‌ அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, தேசிய அளவில் பல கட்சிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக நிலைத்து நின்று, வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கட்சியும், மாநிலமும் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அவரது திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அவரது ஆட்சியை தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி தேசிய அளவிலும், சர்வதேச அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. பெங்களூருக்கு பெரியார் அண்ணா உள்ளிட்ட பலரும் வந்து உரையாடி உள்ளனர். தற்போது பெங்களூரு உள்பட மாநில அளவில் திமுக சிறப்பாக வளர்ந்து வருகிறது. வரும் தேர்தல்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் திமுகவினர் போட்டியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அமைச்சர் சி.வி.கணேசன் பேசியது: கர்நாடக மாநிலம் பெங்களூரில் திமுக முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. 1989 ஆம் கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிருக்கு 50 சதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார். இதனால் மகளிர் பல்வேறு துறைகளில் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் சமூக நீதி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அவர்கள் மனிதனை மனிதன் இழுக்கும் கைவண்டி முறையை ஒழித்து, சைக்கிள் ரிக்ஷாவைக் கொண்டு வந்தார். திருக்குறளை வடித்த திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை அமைத்தார். திமுக ஆட்சி ஏழைகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டோருக்கான ஆட்சி என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் வயதானவர்கள் கட்சியில் அதிகம் உள்ளனர். இளைஞர்களை அதிக அளவில் இணைத்து, பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் சா.மு.நாசர் பேசியது: தமிழர்கள் சென்ற இடங்கள் எல்லாம் காடு, மேடுகளை அழித்து செழுமை ஆக்கினர். ஆனால் அவர்கள் எங்கு சென்றாலும் மொழி மீது பற்று கொண்டிருந்தனர். இதன் காரணமாக சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் மொழிக்கு தேசிய மொழி உள்ளிட்ட அங்கீராம் வழங்கப்பட்டது. கர்நாடகத்தின் வளர்ச்சியிலும் தமிழர்ககளின் பங்கேற்பு அபாரமாக உள்ளது. இங்கு முன்பு திமுக கட்சிக்கு எம்.எல்.ஏ, மாமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் தற்போது இங்கு திமுகவிற்கு அரசியல் அங்கீகாரம் இல்லாமல் உள்ளது வேதனை அளிக்கிறது. எனவே வரும் தேர்தல்களில் திமுகவிற்கு குறைந்த பட்சம் 10 மாமன்ற உறுப்பினர்களாகவும், ஒரு எம்.எல்.ஏவும் வருவதற்கு இத்தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் திமுகவை வளர்ச்சி அடையச் செய்ய மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முந்தைய கட்டுரைஜூனிபர் சென்டர் ஆஃப் ஹோப் பட்டமளிப்பு தினம்
அடுத்த கட்டுரைபெங்களூரில் பெண்களின் கவனத்தை ஈர்க்கும் ‘தி ஜூவல்லரி ஷோ’

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்