முகப்பு Special Story ஜன. 16ல் திருவள்ளுவர் ஜெயந்தி விழா: தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு வர வேண்டும்: பைப்பனஹள்ளி...

ஜன. 16ல் திருவள்ளுவர் ஜெயந்தி விழா: தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு வர வேண்டும்: பைப்பனஹள்ளி ரமேஷ்

0

பெங்களூரு, டிச. 10: பெங்களூரு அல்சூரு ஏரிக்கரையில் ஜன. 16 ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவிற்கு தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு வர வேண்டும் என்று அகில இந்திய அமைப்புச்சாரா தொழிலாளர் காங்கிரஸின் தென் மாநிலங்களில் ஒருங்கிணைபாளர் பைப்பனஹள்ளி ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரு ரேஸ்கோர்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை (டிச. 9) திருவள்ளுவர் ஜெயந்தி விழா குழு தலைவர் பைப்பனஹள்ளி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜன. 16 ஆம் தேதி பெங்களூரு அல்சூரு ஏரிக்கரையில் திருவள்ளுவர் ஜெயந்தி விழா நடத்துவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கூட்டத்தில் பேசிய பைப்பனஹள்ளி ரமேஷ், தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக அளவில் உள்ள அனைவருக்குமே சொந்தமானவர். அவரின் ஜெயந்தியை அனைத்து மொழியினரும் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும்.

முன்பு எஸ்.எஸ்.பிரகாசம் திருவள்ளுவர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடி வந்தார். அவரின் மறைவுக்கு பிறகு, அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டு, திருவள்ளூவர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். கடந்த ஆண்டு காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தப்போதே திருவள்ளுவர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடினோம்.

நிகழாண்டு காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சி செய்து வருவதால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் ஆதரவோடு மேலும் சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

ஜன. 16 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படும் திருவள்ளுவர் ஜெயந்தி விழாவில் தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு வர வேண்டும். இதன்மூலம் நமது ஒற்றுமையையும், பலத்தை காண்பிக்க வேண்டும். இதில் யாரும் கட்சி பேதம் பார்க்காமல் கலந்து கொள்ள வேண்டும். தமிழராய் ஒன்றுபட்டு, திருவள்ளுவரை தாங்கி நிற்போம் என்றார். கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோபி சந்தர், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஸ்ரீதரன், கோபி, பலராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைடிச. 12ல் டாக்டர் எம்.எஸ். ராமையாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியீடு
அடுத்த கட்டுரைஇந்தியாவில் சிறந்து விளங்கி வரும் பள்ளிகளில் ஒன்றாக இண்டஸ் பிசினஸ் அகாடமி

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்