முகப்பு Politics இந்தியா ஒரு நாடு அல்ல, துணைக் கண்டம் என்பதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்:...

இந்தியா ஒரு நாடு அல்ல, துணைக் கண்டம் என்பதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: தமிழ்தாசன்

0

பெங்களூரு, நவ. 6: இந்தியா ஒரு நாடு அல்ல, துணைக் கண்டம் என்பதனை மத்திய அரசு புரிந்து கொண்டு, இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்று திமுக‌ தலைமைக் கழக தீர்மானக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான‌ கவிஞர் தமிழ்தாசன் தெரிவித்தார்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக திமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயல்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்தியை திணிக்க முயன்றால் அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தி திணிப்பை திமுக தொடர்ந்து எதிர்த்து போராடும்.

இந்தியா ஒரு நாடு அல்ல, துணைக் கண்டம் என்பதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். முன்னர் மன்னர்கள் ஆண்ட 56 தேசங்களை, வியாபாரத்திற்காக வந்த ஈஸ்ட் இந்தியா கம்பெனியர், அந்த தேசங்களை பிடித்து, தங்களின் ஆட்சி அதிகாரத்திற்கு உகந்ததாக நிலப்பரப்பை ஒன்றிணைத்து இந்தியா என்று மாற்றிக் கொண்டனர். எனவே இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியதைப் போல, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தியை திணிக்கக்கூடாது. மொழிகளிலேயே முதல் மொழியால் தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும். தமிழைப் போல இந்திக்கு இலக்கியம், இலக்கணம், பண்பாடு உள்ளிட்ட எதுவும் இல்லை என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1950 களில் இந்தியாவில் ஏறக்குறைய 34 கோடி பேர் இருந்தனர். அவர்களில் இரண்டரை கோடி பேர் மட்டுமே இந்தியை பேசி வந்தனர். எனவே தமிழகம் உள்ளிட்ட 56 நாடுகளில் பேசும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி பேசியது: ராஜாஜி காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழியை கட்டாயமாக்க முயன்றப்போது, பெரியார், அண்ணா அவர்களைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் அதனை கடுமையாக எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் தாளமுத்து, நடராஜன் போன்றோர் உயிரிழந்தனர். ராஜாஜித் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பதவி ஏற்றப்போதும் இந்தியை திணிக்க முயன்றனர். அப்போது அவருக்கு இந்தியை திணித்தால் தமிழ் அழிந்து போகும் என்று அண்ணா பல்வேறு விளக்கங்களை அளித்து புரிய வைத்தார். தமிழகத்தில் திமுகவின் கடுமையான போராட்டத்தால், அப்போதை அரசு இந்தி திணிப்பை கைவிட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் மக்கள் விரும்பாத வரை இந்தியை திணிக்கக் கூடாது. ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும். இலக்கியம், இலக்கணம் உள்ளிட்டவைகளை கொண்டுள்ள தமிழை தவிர்த்து இந்தியை திணிக்க முயல்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியை திணித்தால், திமுக அதனை எதிர்த்து தொடர்ந்து போராடும் என்றார்.

நிகழ்ச்சியில் மொ.பெரியசாமி, தட்சிணாமூர்த்தி, முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஏ.டி.ஆனந்தராஜ், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் மு.இராஜசேகர், மகளிர் அணி துணை அமைப்பாளர் மங்கம்மாள், இராமசந்திரபுரம் கிளை செயலாளர் சே.தமிழ்செல்வன், மாநில துணை அமைப்பாளர் ஜி.இராமலிங்கம், முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் வி.எஸ்.மணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.சுந்தரேசன், இலக்கிய அணி தலைவர் புலவர் முருகு தருமலிங்கம், தலைமை கழகப் பேச்சாளர் ஆற்காடு அன்பழகன், தொ.மு.ச.பேரவை செயலாளர் த. திருமலை ஆகியோர் கலந்து கொண்ட‌னர். கூட்ட நிறைவில் மாநில இளைஞரணி அமைப்பாளர் டி.சிவமலை நன்றியுரை ஆற்றினார்.

முந்தைய கட்டுரைஎஸ்எப்பிஐ இன் சங்கமம் இசை விழா கர்நாடக இசையை அனைவருக்கும் கொண்டு செல்கிறது
அடுத்த கட்டுரைஇந்தியாவின் சிறந்த டாட்டூ மற்றும் இசை விழா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்