முகப்பு International வெளிமாநிலத் தமிழர்களின் நலனுக்கு பல்வேறு திட்டங்கள்: தமிழக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர்...

வெளிமாநிலத் தமிழர்களின் நலனுக்கு பல்வேறு திட்டங்கள்: தமிழக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி

0

பெங்களூரு, ஜூன் 22: வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்களின் நலன்காக்கும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று தமிழக அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் நோக்கில் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த கர்நாடகத் தமிழர் சந்திப்புக்கூட்டத்தில் பங்கேற்று, அவர் பேசியது: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு பிழைப்பு தேடி, நாட்டின் பல மாநிலங்கள், பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையும் அதன் கீழ் இயங்கும் ஆணையரகமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டை கடந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை மாநிலங்கள் இடையிலான உறவில் எந்த குழப்பமும், விரிசலும் ஏற்படாமல், சட்டத்திற்கு உட்பட்டு என்னென்ன பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியுமோ அவை செயல்படுத்தப்படும்.

பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, தமிழ்ப்பண்பாடு சார்ந்த விழாக்களுக்கு ஒத்துழைப்பு, நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக அயலகத் தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வுத்துறையில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தமிழர்கள் உறுப்பினராக சேர வேண்டும். அப்படி சேரும் உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது. பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைக்கு நிதியுதவி செய்யப்படுகிறது. இதே சலுகையின் கீழ் விரைவில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தும் யோசனையும் உள்ளது.

கர்நாடகத்தில் சிறுதொழில் செய்வோர், சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட தொழில் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தினால், தமிழ்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்படுத்த தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தினால் கலை குழுவினர் அனுப்பி வைப்பது உள்பட தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். தமிழை கற்றுத்தருவது தவிர வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்களின் நலன்காக்கும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பயன்களை பெற எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார். கர்நாடக சுற்றுலாதுறை இயக்குந‌ரும், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத் தலைவருமான டாக்டர் வி.ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை, அனைத்திந்திய தமிழ்ச்சங்கப்பேரவைத்தலைவர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

டாக்டர் வி.ராம்பிரசாத் மனோகர் பேசும்போது, “தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற‌வேண்டும். நமது மொழி, கலை, பண்பாடு என்ற உணர்வு உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களிடம் உள்ளது. ஒரு மாநிலத்தில் அதிகாரியாக இருப்பவர்கள், அந்த மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். இந்நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களின் குறைகளை கேட்டு தீர்வுகாண முற்பட்டிருப்பதை பாராட்டுகிறேன்” என்றார்.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, “தமிழ்நாட்டை கடந்த பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக சேவை செய்ய தனித் துறை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்கள் கல்வி, அறிவியல், தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும். உயர்கல்வி பயில்வதற்கான சூழல் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் மங்களூரு தமிழ் சங்கம், மைசூரு தமிழ் சங்கம், சிவமொக்கா தமிழ்ச்சங்கம், தங்கவயல் தமிழ்ச்சங்கம், குடகு தாய்தமிழ்ச் சங்கம், தார்வாட் தமிழ்ச்சங்கம், நிமான்ஸ் தமிழ்ச் சங்கம், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை, பெங்களூரு தமிழ் மன்றம், திருவள்ளுவர் சங்கம், கர்நாடகத் தமிழர் பாதுகாப்ப இயக்கம், கர்நாடக தமிழர்-கன்னடர் ஒற்றுமை இயக்கம் உள்பட 30க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், கர்நாடக மாநில திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, கர்நாடக தமிழர் கட்சி உள்பட பல கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பல தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் சங்கத்திற்கு சொந்த கட்டடம் வேண்டும், தமிழ்மொழி கல்வி பயில வசதிகள் செய்ய வேண்டும், வேலைவாய்ப்புகளில் கர்நாடக தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் உள்ள கிராமங்களில் வாழும் தமிழர்களுக்கு அடிப்படை சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை முன் வைத்தனர். பின்னர், ஒவ்வொருவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக ஆணையரிடம் கொடுத்தனர்.

தமிழக அரசின் கல்வித்துறை இணை இயக்குந‌ர் குமார், தமிழ் இணையக்கல்விக்கழக துணை இயக்குநர் மதுரா, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜெயஜோதி, சித்த மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் மல்லிகா, மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணையத்தின் அதிகாரி ஒய்.ஆர்.மானெக்ஷா, ஹிந்து அறநிலையத்துறை இணை இயக்குநர் சபர்மதி அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறைகள் சார்பில் மேற்கொள்ளும் திட்டங்களை விளக்கினர்.

முந்தைய கட்டுரைஇந்திய சந்தையில் நுழைந்த அட்மிரல் அமெரிக்கா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்
அடுத்த கட்டுரைஒரு லட்சம் பேரை திரட்டி திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்