முகப்பு Bengaluru புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பெயரைச்சூட்ட வேண்டும்: முன்னாள் எம்.பி. உதித்ராஜ்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பெயரைச்சூட்ட வேண்டும்: முன்னாள் எம்.பி. உதித்ராஜ்

0

பெங்களூரு, மார்ச் 16: டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் பெயரைச்சூட்ட வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகளின் கூட்டமைப்புத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான உதித்ராஜ் தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை நடந்த அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் சிறப்புவிருந்தினராக பங்கேற்று, அவர் பேசியது: டில்லியில் நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகே புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச்சூட்ட வேண்டும். இந்தகோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு தான் நாடாளுமன்றத்தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும். புதிய நாடாளுமன்றத்திற்கு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை சூட்டுவது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் மாவட்டம், வட்டம், கிராம அளவில் வட்டமேஜை மாநாடுகளை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

அதேபோல, பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் நிறுவனங்களாக மாற்றி வருகின்றன. இதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு உரிமை பறிபோகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும். மேலும் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுமுறையை அமல்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டுமுறையை ஒழிப்பதற்காக சதி நடந்துவருகிறது. இதை முறியடிக்க மக்கள் ஒன்றுதிரள வேண்டும். வீதியில் வந்து போராடாதவரை நமக்கான உரிமையை வென்றெடுக்க முடியாது என்றார்.

விழாவுக்கு கூட்டமைப்பின் கர்நாடககிளைதலைவர் ஆர்.ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பி.சங்கர்தாஸ் நோக்க உரை ஆற்றினார். விழாவில் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கே.மகேஷ்வர்ராஜ், தமிழக கிளைத்தலைவர் கருப்பையா, எஸ்.சித்தராஜூ, கனராவங்கி ஊழியசங்கத்தலைவர் புருஷோத்தம்தாஸ், கர்நாடக அரசு ஊழியர் சங்கத்தலைவர் டி.சிவசங்கர், துணைத்தலைவர் அம்பிகுமார்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


முந்தைய கட்டுரைசிட்ஸ் ஃபார்மின் (Sid’s Farm) தொகுக்கப்பட்ட இனிப்பான‌ லஸ்ஸி ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் அறிமுகம்
அடுத்த கட்டுரைபெங்களூரில் மார்ச் 23 இல் கருநாடக மாநில திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் 70-வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்