முகப்பு Education தாய்மொழியில் கல்வியை கற்பதற்கான உரிமையை கொடுப்பது அரசின் கடமை: வி.இராம்பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ்

தாய்மொழியில் கல்வியை கற்பதற்கான உரிமையை கொடுப்பது அரசின் கடமை: வி.இராம்பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ்

0

பெங்களூரு, ஜூன் 9: மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வியை கற்பதற்கான உரிமையை கொடுப்பது அரசின் கடமை என்று கருநாடக அரசின் சுற்றுலாத்துறை ஆணையர் டாக்டர் வி.இராம்பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.

பெங்களூரில் கருநாடக அரசு எஸ்.எஸ்.எல்.சி. தமிழ்ப் பயிற்றுமொழி, முதல்மொழி தமிழ் பாடப்பிரிவு, 2 ஆம் ஆண்டு பியூசி மொழிப்பாடம் தமிழ் பாடத்தில் மாநில அளவில் நடந்த பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தியாகராஜநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா செந்தில்குமரன் (SVCK) தமிழ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு, மாண‌வர்களுக்கு பொற்கிழிகளை வழங்கிய, கருநாடக அரசின் சுற்றுலாத்துறை ஆணையர் டாக்டர். வி.இராம்பிரசாத் மனோகர் ஐ.ஏ.எஸ் பின்னர் பேசியது: ஜெர்மனியில் தமிழ்மொழியில் பாடம் கற்பிக்க தமிழ் ஆசிரியர்களை அங்கு அரசு நியமித்துள்ளது. இதற்கு அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் முழு அழுத்தம் கொடுத்ததே காரணம். அதே போல இந்தியாவில் தமிழை கற்றுக் கொடுக்க தமிழ்ச் சங்கங்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட‌ பிராந்திய மொழிகளை சம்பந்தப்பட்ட‌ மாணவர்களுக்கு தாய் மொழியில் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு அவரவர்களின் தாய்மொழியில் கல்வியை கற்பதற்கான உரிமையை கொடுப்பது அரசின் கடமை. தாய்மொழியில் கல்வி கற்கும் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம். ஏழ்மையையும், தடையும் தாண்டி மாணவர்கள் கல்வி பயில்வது அவசியம். கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் என்றார்.

முன்னதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்புரை நிகழ்த்தினார். டி. இலட்சுமிபதி தலைமையுரை நிகழ்த்தினார். கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ.தனஞ்செயன் (எ) வெற்றிச் செல்வன் தொகுப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில், திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, கன்னடர், தமிழர் நல்லிணக்க நற்பணி மன்றத் தலைவர் ராமசந்திரன், சத்யசாய் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை தலைவர் ராஜகோபால பாலாஜி உள்ளிட்ட கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைமனோல்லாசா நூல் வெளியீடு; வேதம் இந்தியாவின் அடித்தளம்: ஹலதிபூர் வாசுதேவ ராவ்
அடுத்த கட்டுரைஉயர்கல்வியில் வேலை சார்ந்த பாடத்திட்டத்தை அமல்படுத்த முன்னுரிமை: அமைச்சர் டாக்டர் எம்.சி.சுதாகர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்