முகப்பு Uncategorized கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி ஏற்பு

கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி ஏற்பு

ஜி.பரமேஸ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கியோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமதுகான் அமைச்சர்களாக பதவி ஏற்பு.

0

பெங்களூரு, மே 20: கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக அளவில் வெற்றி பெற்ற நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்று கொண்டனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கட்சித் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பெங்களூரு கண்டீரவா திடலில் சனிக்கிழமை ப‌தவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 2 வது முறையாக கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் அவருக்குப் பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தொடர்ந்து துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும், அவரைத் தொடர்ந்து அமைச்சர்களாக ஜி.பரமேஸ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கியோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமதுகான் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு எம்.பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய கட்டுரைநுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறந்து விளங்கும் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர்
அடுத்த கட்டுரைதிராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு: ஜே.எம்.பஷீர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்