முகப்பு Bengaluru ஒரு லட்சம் பேரை திரட்டி திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

ஒரு லட்சம் பேரை திரட்டி திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம்: பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ்

0

பெங்களூரு, ஜூன் 24: பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் ஜனவரி 16 ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பேரை திரட்டி, திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம் என்று விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் நடைபெறும் கட்டுமானப்பணிகளை திங்கள்கிழமை சிவாஜிநகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் செயலாளர் வ.ஸ்ரீதரன், கோபிநாத், பெங்களூரு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தின் பொருளாளர் கோபிநாத், தன்னுரிமை மனமகிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் ராஜசேகர், காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவைச் சேர்ந்த மூத்த தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிஸ்வான் அர்ஷத், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தை சீரமைக்கவும், அழகுபடுத்துவும், இன்னும் 6 மாதங்கள் ஆகும். அதன் பின்னர் திருவள்ளுவர் வடித்த திருக்குறளில் உள்ள அனைத்து குற‌ள்களையும், தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலம், கன்னடத்தில் மொழி பெயர்த்து இங்கு பதிப்பிக்கப்படும். அழகான ஓவியங்களை வரைந்து, இந்த இடத்தை மேலும் அழகு படுத்த உள்ளோம். சீரமைக்கும் பணிகளுக்கு ஏற்கெனவே சுமார் ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசிடம் மேலும், ரூ. 2 கோடி ஒதுக்க வலியுறுத்தி, கட்டுமானப்பணிகள் மேலும் சிறப்பாக செய்யப்படும். சிலையை கண்காணிக்க‌ 5 சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் பேசியது: அல்சூரு ஏரி அருகே உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் இத்தொகுதியின் எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத் அவர்கள் சிறப்பாக கட்டுமானப்பணிகள் மேற்கொண்டுள்ளார். நாங்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், அவர் நேரடியாக இங்கு வந்து கட்டுமானப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஏற்கெனவே திட்டமிட்டதற்கும், 2 மடங்கு அதிகமாக கட்டுமானப் பணிகளை சிறப்பாக செய்து, இந்த இடத்தை சுற்றுலாதலம் போல ஆக்கவும், திரளானவர்கள் இங்கு வந்து திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு செல்வதற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

விஸ்வகவி திருவள்ளுவர் சங்கத்தை பதிவு செய்துள்ளோம். சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி உள்ளோம். ஜனவரி 16‍ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை சிறப்பாக கொண்டாட உள்ளோம். இந்த ஆண்டு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேரை திரட்டி, மிகப் பெரிய அளவில் திருவள்ளுவர் தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். தமிழ்த் தலைவர்களுடன் இணைந்து, கட்சி, ஜாதி, மதம், மொழி கடந்து ஒற்றுமையாக திருவள்ளுவர் தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்றார்.

முந்தைய கட்டுரைவெளிமாநிலத் தமிழர்களின் நலனுக்கு பல்வேறு திட்டங்கள்: தமிழக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி
அடுத்த கட்டுரைஅப்பல்லோ மருத்துவமனைகளில் இந்தியா துணைக் கண்டத்தின் முதல் ரோபோடிக் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி திட்டம் அறிமுகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்