Bangalore Dinamani

முன்னாள் மேயர் மீது வழக்கு பதிவு: திமுக கண்டனம்

பெங்களூரு, மே 8: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர்களை பிடித்து கொடுத்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் மஞ்சுநாத் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாரை கண்டித்து அக்கட்சியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மேயர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதற்கு மாநில திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ், மஜத, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். திங்கள்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், அண்மையில் பிடிஎம் லேஅவுட் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் மஞ்சுநாத்ரெட்டி, போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல், பிடித்து கொடுத்த மஞ்சுநாத்ரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மஞ்சுநாத்ரெட்டி மீது வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் திங்கள்கிழமை மடிவாளா காவல் நிலையத்தின் முன்பு, தர்னாவில் ஈடுபட்டு, ஆளும் கட்சியைச் சேர்ந்த பாஜகவினரை கண்டித்து குரல் எழுப்பினர். தர்னா போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி, முன்னாள் மேயர் மீது வழக்கு பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, தர்னாவிற்கு தலைமை ஏற்று நடத்திய பிடிஎம் லேஅவுட் காங்கிர்ஸ் வேட்பாளர் ராமலிங்கரெட்டியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Exit mobile version