Bangalore Dinamani

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒரு சகாப்தம்: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

பெங்களூரு, ஆக. 7: முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒரு சகாப்தம் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக தலைமை அலுவலகம் கலைஞர் வளாகத்தில் திங்கள்கிழமை முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலைஞரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். பின்னர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ந.இராமசாமி பேசியது: கலைஞர் மு.கருணாநிதி சாதாரணமானவர் அல்ல. அவர் ஒரு சகாப்தம். தமிழ்நாட்டில் அவர் தொடக்கிய பணிகளால்தான், தமிழ்நாடு வளம் பெற்றதோடு, தமிழையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தது. அவர் ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி பெறச் செய்தார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அரியாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தார். அவரது ஆட்சியின் தென்னகம் தலை நிமிர்ந்து நின்றது. தமிழ் மொழிக்கு உச்சாணி கொம்பு வைத்து, அதற்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தார். வட மாநிலத்தவரை, தமிழ்நாட்டை நோக்கி திருப்பி பார்க்க வைத்தவர் கலைஞர்தான். இந்திய அரசியலை வழி நடத்திவரும் அவர்தான். அவரது எண்ணம், பிரதிபலிப்பால் இந்தியாவில் பல பிரதமர்களை உருவாக்கினார். அவர் வாழ்ந்த காலம் தமிழ்நாட்டின் பொற்காலம். உலகம் முழுவதும் தமிழர்களை தாங்கிப்பிடித்தவர் கலைஞர். திராவிடத்தையும், திராவிட மொழியை சீர் தூக்கி நிறுத்தியவர்.

அவரது வழியில் ஆட்சியை நடத்தும் தமிழ்நாட்டு முதல்வர் தளபதி ஸ்டாலின், திராவிட மாடலை கொண்டு வந்துள்ளார். இதற்கு அச்சாணியாக இருந்தவர்கள் தந்தை பெரியாரும், அவருடன் இருந்த அண்ணாவும், அவரது வழியில் நடந்த முத்தமிழறிஞர் கலைஞரும்தான் காரணம். அவர்கள் வழியில் பின் தொடர்ந்து வரும் தளபதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதற்கெல்லாம மூல காரணமாக விளங்கும் கலைஞரின் நினைவு நாளில் அவருக்கு கர்நாடக மாநில திமுக வீர அஞ்சலியை செலுத்துகிறது என்றார்.

நினைவு தினத்தில் முன்னாள் நிர்வாகி, கே.எஸ்.சுந்தரேசன், வி.எஸ்.மணி, இளைஞர் அணி துணைத் அமைப்பாளர்கள் ராஜசேகர், எம்.முருகானந்தம், சதீஷ், லியோராஜ், மகளிர் அணி அமைப்பாளர் சற்குணம், லாவண்யா, ஷாந்தினி, கீதா, ராஜேஸ்வரி, லட்சுமி, எம்.ஆர்.பழம்நீ, ஆற்காடு அன்பழகன், உட்லண்ட்ஸ் கணேசன், தமிழ்ச் செல்வன், ஏழுமலை, ஜி.நாகராஜ், ஆ.கரிகாலன், தாமோதரன், மாணிக்கம், லோகநாதன், வெள். சிவகுமார், சந்திரன், அன்பு உள்ளிட்ட‌ திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version