Bangalore Dinamani

கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களும் கன்னடர்தான்: கர்நாடக சட்டமேலவைத் தலைவர் பசவராஜ் ஹொரட்டி

பெங்களூரு, நவ. 14: கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களும் கன்னடர்தான் என்று கர்நாடக சட்டமேலவைத் தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.


பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கர்நாடக தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கருநாடக உதய தினம், புத்தக வெளியிட்டு விழா, குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பேசியது: ஜவகர்லால் நேரு பிறந்த தினமான‌ நவ. 14 ஆம் தேதியை நாம் குழந்தைகள் தினம் என்று கொண்டாடுகிறோம். நேருவைப் போல குழந்தைகள் அன்பு கொண்ட பல தலைவர்கள் நம்மிடையே உள்ளனர். கர்நாடக தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கருநாடக உதய தினம், புத்தக வெளியிட்டு விழா, குழந்தைகள் தின விழாவில் நான் பங்கு கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

நாம் எல்லாம் கருநாடகத்தில் உள்ளோம். கருநாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தேசிய அளவில் கருநாடகத்தைப் போல சுதந்திரமாக பலரும் வாழும் மாநிலம் வேறு எங்கும் இல்லை. சென்ற மாதம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றேன். அங்கு கன்னடர்களும், கன்னட சங்கங்களும் உள்ளன. அவர்களும் அந்தந்த மாநிலங்களுக்கு தகுந்தவாறு வாழ்ந்து வருகின்றனர். கர்நாடகத்தில் வாழும் தமிழர்களும், கன்னடர்களுடன் இணைந்து வாழ வேண்டும். கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். பெங்களூரில் 20 சதம் தமிழர்களும், 23 சதம் கன்னடர்களும் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களும் கன்னடர்தான். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகின்றது.

உங்களின் எந்த பிரச்னைகளுக்கும், குறிப்பாக தமிழ்பள்ளிகள், தமிழாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்க அரசும், நானும் தயாராக உள்ளோம். தாய்மொழிக்கு தமிழர் உள்ளிட்ட அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும். தங்களது தாய் மொழியை அனைவரும் வளர்க்க வேண்டும். தமிழர்கள் இங்கு வாழ்வதால், அவர்கள் கன்னடத்தையும் தங்கள் தாய்மொழியைப் போல கருத வேண்டும். வளர்க்க வேண்டும். அதே போல தமிழ் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை அளித்து, அவர்களை நல்ல குடிமக்களாக ஆக்க வேண்டும். நான் உள்ளிட்ட அரசுக்கு தமிழர்கள், கன்னடர்கள் என்ற வேற்றுமை இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மாநிலத்தில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இதில் டி.இலட்சுமிபதி, எழுத்தாளர் அனிதா கிருஷ்ணன், முத்துமணி நன்னன், எஸ்.எம்.பழனி, என்.ராமசந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் தனஞ்செயன் தலைமை வகித்தார். பேராசிரியர் பொன்.க‌.சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். நோக்க உரையை புலவர் கார்த்தியாயினி ஆற்றினார். ஜி.சம்பத் நன்றியுரை ஆற்றினார். சங்கத்தைச் சேர்ந்த முனைவர் இரா.பிரபாகரன், மேனாள் செயலாளர் வி.மெர்லின், செயற்குழு உறுப்பினர்கள் சுசீதா, பீனா, மஞ்சுளா, ஜோதி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version