Bangalore Dinamani

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்ப்பு

பெங்களூரு, ஏப். 30: இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயரும் என இலங்கை அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான சுற்றுலா மற்றும் கலாச்சார இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இலங்கை ரோட்ஷோக்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெங்களூரில் வெள்ளிக்கிழமை ரோட்ஷோ நடைபெற்றது.

இதில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை சுற்றுலா வளர்ச்சிப் பிரிவின் தலைவர் சாலக கஜபாகு, இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூரிய, அதிகாரிகளான ஸ்ரீராணி ஹேரத் மற்றும் மல்கந்தி வெலிக்லா ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பேசுகையில், “கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை 46 ஆயிரம் இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். “இந்த மூன்று மாதங்களில், சராசரியாக 8000 சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு நாளும் இலங்கைக்கு வருகிறார்கள், இது 2018 க்குப் பிறகு அதிக எண்ணிக்கையாகும்” என்று அவர் கூறினார்.

“ரோட்ஷோ இலங்கை சுற்றுலா மற்றும் சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை வழங்கும். ரோட்ஷோ பல்வேறு சுற்றுலா தலங்கள், கலாசார விழுமியங்கள், சுற்றுலா வாய்ப்புகள் மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 530 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 482 மில்லியன் டாலர்களாக இருந்தது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த ரோட் ஷோவில் இந்தியாவின் சுற்றுலா அமைப்புகள், செல்வாக்கு செலுத்துபவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் முன்னணி சுற்றுலா அமைப்புகள் கலந்து கொண்டனர். முக்கிய ஹோட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்களும் பங்கேற்றன.

“2500 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இலங்கையில் யோகா, கடற்கரை, ஷாப்பிங், உணவு, சாகச மற்றும் வனவிலங்கு இடங்கள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்திய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ராமாயண சுற்றுப்பயணம் பிரபலமானது என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை சுற்றுலா வளர்ச்சி பிரிவு தலைவர் சாலக கஜபாகு, இலங்கை மாநாட்டு பணியக தலைவர் திசும் ஜெயசூரி ஆகியோரும் பேசினர்கள்.

Exit mobile version